அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா ? ஆய்வு செய்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 18-
அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக உள்ள முரளிதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரைக்கும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்புக் கட்டணமான 50 ரூபாயைத் தவிர, கூடுதல் தொகையை மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது எனக் கடந்த ஜூன் 18-ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறி, பள்ளித் தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா 100 ரூபாய் வசூலிக்கிறார்.
கட்டணம் செலுத்த முடியமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால், இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கூடுதல் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சனைப் பணி நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி துறை ஆணையர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதை கேட்டுக் கொண்ட நீதிபதி, அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.மேலும் கூடுதலாக கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.