பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ல் வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Loading

சென்னை, ஜூலை 16-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற இருந்தது. கரோனா 2-வது அலை பரவலின் தீவிரம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து மாணவர்களின் 10, 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 70 சதவீதம், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற அளவில் இறுதி மதிப்பெண் வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. தொடர்ந்து பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
”அரசாணை (நிலை) எண்.105 பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள்.12.07.2021-ன்படி, 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், 19.07.2021 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளைக் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
1. www.tnresults.nic.in
2. www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. www.dge.tn.gov.in
மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலைத் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்”.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *