திருவள்ளூரில் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு :
திருவள்ளூர் ஜூலை 04 : திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கடம்பத்தூர் ஊராட்சி, ஆஞ்சநேயர்புரம் அருகில் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசிகள் போடும் பணிகளை பார்வையிட்டு, அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.அப்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது :
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 இருளர் இன குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு மின்சாரம், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதில் ஏற்கனவே குடிநீர் கைபம்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மக்கள் பட்டா கோரி விண்ணப்பித்தனர். அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த கொரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் ஒரு சிலர் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டு, தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஏழை, எளிய பழங்குடியின, சிறுபான்மையின மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர்கள் வாயிலாக அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து அவர்களது வாழ்வாரம் மேம்படச் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இதில் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.