திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோபுரப்பணிகள், அடிப்படை வசதிகள் தொடர்பாக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிலுவையில் உள்ள சாலை, கோபுரப் பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான இந்த கோயிலில் பக்தர்களின் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் புதிய ராஜ கோபுரம் கட்டிய பிறகு அந்த ராஜ கோபுரத்தின் வழியாக முருகனை தரிசித்து செல்வதற்கான படிகட்டுகள் இன்னும் அமைக்கப்படாமல் இருக்கின்றன. அவை ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு, தொல்லியல்துறை அனுமதிக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதை விரைவுப்படுத்துவதற்கு சம்பந்தபட்ட அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலர்களும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இத்திருக்கோயிலின் அடிவாரத்தில் குளம் இருக்கின்றன. பக்தர்கள் கிருத்திகை போன்ற நாட்களில் விசேஷமாக நீராட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அந்த குளமும் 9 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. தூர்வாரப்படாமல் இருக்கும் இந்த குளத்தின் பணிகளையும் உடனடியாக தூர்வார மேற்கொள்ளப்படவுள்ளது. பக்தர்கள் தங்கும் விடுதிகள் 250–க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய விடுதிகள் உள்ளன.
புதியதாக ஒரு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு வெள்ளித்தேர், தங்கத்தேர் என்று இரண்டு தேர்கள் உள்ளது. அந்த தேர்களையும் விரைவில் ஓட வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருக்கோயிலுக்கு படிகள் அதிகம் இருப்பதால் மூத்தோர்கள், முதியோர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு கடினமான சூழ்நிலை இருப்பதை அறிந்து ரோப்கார் அமைக்கவும், நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இதில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்,திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், திருக்கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்