ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 2 பேர் கைது :

Loading

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 2 பேர் கைது :

திருவள்ளூர் ஜூலை 02 : தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக அரசு சார்பில் இலவசமாக அரிசியை வழங்கி வருகிறது. இதனை நியாய விலைக் கடைகள் மூலமாகவும், தரகர்கள் மூலமாகவும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரிசியை வாங்கி டன் கணக்கில் லாரிகள், வேண்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்துவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியிலிருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடியான எளாவூர் சோதனைச் சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் 71 மூட்டைகள் கொண்ட 3550 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார ரேசன் கடைகள் மற்றும் பொது மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை ஆந்திராவுக்கு கடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கடத்தலில் ஈடுபட்ட வீரமணி மற்றும் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 3550 கிலோ அரிசியை நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *