இளம்பெண் கூட்டு பலாத்காரம்- பேக்கரி உரிமையாளர் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

Loading

திருச்சி மாவட்டம் நாவல்பட்டு ரோட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் தனது கணவருடன் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு வேலை இல்லாததால் வேறு வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடி வந்தனர்.

அப்போது அன்னூரில் பேக்கரி நடத்தி வரும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மொய்தீன் குட்டி (வயது 40) என்பவர் அங்கு சென்றபோது அந்த இளம்பெண் மற்றும் அவரது கணவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

அவர்களிடம் மொய்தீன் குட்டி தனது பேக்கரியில் வேலை உள்ளதாகவும் தங்க வீடும், நல்ல சம்பளமும் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் தனது கணவருடன் கோவை வந்து தங்கி பேக்கரியில் வேலை செய்து வந்தனர் .

இந்தநிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பேக்கரி மூடப்பட்டது. இதனால் பேக்கரியில் வேலை இல்லாததால் அந்த இளம் பெண்ணின் கணவர் அருகே உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்கு சென்றார்.

அப்போது அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இளம்பெண் தனியாக இருந்ததை அறிந்த பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டி அவரிடம் வேலை செய்து வந்த சமீர் (25) மற்றும் சிகாபுதீன் (27) ஆகியோரை அழைத்துக்கொண்டு கடந்த 5-ந் தேதி அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இந்தநிலையில் 2 நாட்கள் கழித்து மீண்டும் அவர்கள் அங்கு சென்று அந்த இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனது கணவரிடம் நடந்ததை கூறி கதறி அழுதார். உடனே அவரது கணவர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேக்கரியில் வேலை செய்து வந்த சமீர் மற்றும் சிகாபுதீன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசார் வருவதை அறிந்த மொய்தீன் குட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து தப்பி ஓடிய மொய்தீன் குட்டியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மொய்தீன் குட்டியை பிடிக்க கேரளா விரைந்துள்ளனர். அங்கு போலீசார் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *