பசுமை செயல்பாட்டிற்குத் தயாராகும் இந்திய ரயில்வே -சந்திரஜித் பானர்ஜி, தலைமை இயக்குனர், சிஐஐ

Loading

பசுமை செயல்பாட்டிற்குத் தயாராகும் இந்திய ரயில்வே
-சந்திரஜித் பானர்ஜி,
தலைமை இயக்குனர், சிஐஐ

“நம் நாட்டில் இணைப்புவசதிகளை அளிப்பதில், இந்திய ரயில்வே
முக்கியப் பங்கு வகிக்கிறது; கைவிடப்பட்ட பகுதிகளையும்
இணைக்கிறது. இது, நமது முன்னேற்றத்தின் உண்மையான
ஜீவாதாரமாகத் திகழ்கிறது : மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர
மோடி
“ரயில்வே, இயற்கையிலேயே ஒரு பசுமையான போக்குவரத்து
முறையாகும். ரயில்வே துறையின் எரிசக்தி ஆதாரத்தில்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பின்பற்றுவதன் மூலம், இதனை
மேலும் பசுமையானதாக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்“.
திரு.பியூஷ் கோயல், மாண்புமிகு ரயில்வே அமைச்சர், இந்திய அரசு
பசுமையை நோக்கி, உலகம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்
வேளையில், அனைத்து உறுதிப்பாடுகள் மற்றும் உற்சாகத்துடன்,
இந்திய ரயில்வே இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறது. பசுமை
நடவடிக்கைகளைப் பின்பற்றுவது, எரிசக்தி & தண்ணீர் சேமிப்பு
மற்றும் கழிவு மேலாண்மையில், ஏராளமான பலன்களை அளிக்கும்
என்பது உறுதி.
ரயில்வேத் துறை, பசுமை நடவடிக்கைகளை ஒரு தேசிய
இயக்கமாக மேற்கொண்டு வருவதுடன், பசுமை முறைகளைப்
பின்பற்றும் உலகின் மாபெரும் ரயில்வே கட்டமைப்பாகவும்
திகழ்கிறது. இது இந்தியாவிற்கு பெருமிதம் அளிப்பதுடன், உலக
நாடுகளில் முன்னணி நாடாகவும் திகழச் செய்கிறது !
சுற்றுச்சூழலுக்கு உகந்த, ஆதாரவள சிக்கனம், குறைந்த செலவு,
பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான அதிநவீன
முறைகளைப் பின்பற்றுதல் போன்ற முழுமையான
தொலைநோக்குப் பார்வையுடன் ரயில்வே செயல்படுவதுடன், புதிய
மற்றும் வளர்ச்சியை விரும்பும் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி
செய்வதாகவும் திகழ்கிறது. மின்சாரமயமாக்கும் மாபெரும் திட்டம்,
பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தேவையைப் பூர்த்தி

செய்யக்கூடிய வகையில் எரிசக்தி சிக்கனம் மற்றும் நீர்
மேலாண்மை போன்ற சுற்றுச்சூழல் முன்முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பசுமையாக்கலுக்கான மாபெரும் அணுகுமுறை, இந்தியாவில்
பாரம்பரியமாக போற்றப்படும் -பூமி(நிலம்), எரிசக்தி(நெருப்பு),
தண்ணீர்(நீர்), காற்று(வாயு) மற்றும் விண்வெளி(வானம்) ஆகிய
இயற்கையின் ஐந்து அம்சங்களுக்குத் தீர்வு காண்பதாக உள்ளது.
இந்திய ரயில்வே, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து
மின்சாரமயமாக்கலை நோக்கிச் செல்வதுடன், மாற்று எரிசக்தி
வளங்களைப் பயன்படுத்துதல், ரயில்கள் இயக்கத்தில் செயல்திறன்
அதிகரிப்பு, மற்றும் கிளைகள் அளவிலும் பல்வேறு பசுமை
நடைமுறைகளை செயல்படுத்துகிறது.
தூய்மையான எரிபொருள் பயன்பாட்டை நோக்கிச் செல்வதில்
முதற்கட்டமாக, ரயில்வே மின்மயமாக்கல் முக்கியமான
நடவடிக்கையாக கருதப்படுகிறது. மின்சார ரயில்கள் அதிக
செயல்திறன் உடையவையாகவும், குறைந்த அளவில் மாசு
ஏற்படுத்தக் கூடியதாகவும், செலவு குறைவானதாகவும்
கருதப்படுகின்றன. ரயில்வே மின்மயமாக்கலின் வேகம், 2014-15ல்
ஆண்டுக்கு 610 கி.மீ.-ஆக இருந்த நிலையில், தற்போது பத்து மடங்கு
அதிகரித்து, 2020-21-ல் ஆண்டுக்கு 6015 கி.மீ.-ஆக உள்ளது. 2020-21-ல்
நாட்டில் நிலவிய கோவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டால்,
இது மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது! 2023 டிசம்பர்
மாதத்திற்குள், அகல ரயில்பாதைகளை 100% மின்மயமாக்க
ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. இது, டீசல் எஞ்சின்
பயன்பாட்டை ஒழிப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுபவதையும்
கணிசமாகக் குறைக்கும்.
கடந்த சில ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான செலவு
குறைந்து வருவது, நாட்டிற்கு நல்ல அறிகுறியாகும். அடுத்த 10
முதல் 20 ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் முக்கியப் பங்கு
வகிக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும்
400 ரயில்வே கட்டடங்களின் மேற்கூரைகளில், 114 மெகாவாட்
திறன்கொண்ட சூரியசக்தி மேற்கூரைகளை ரயில்வேத் துறை
நிறுவியுள்ளது. ரயில்வே மின்மயமாக்கலுக்கு தேவைப்படும்

மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு,
ரயில்வேக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாமல் உள்ள
காலியிடங்களிலும் சூரியசக்தி மின்னுற்பத்தி சாதனங்களை நிறுவ
திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார ரயில் போக்குவரத்திற்கான
மின்சாரம் உட்பட இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த மின்சாரத்
தேவையையும் பூர்த்தி செய்யும் விதமாக, நில மேற்பரப்பில் 20
ஜிகாவாட் சூரியசக்தி மின்னுற்பத்தி சாதனங்களை நிறுவவும்
ரயில்வே திட்டமிட்டுள்ளது.
திறன் மிகுந்த தொழில்நுட்பங்களைப் பின்பற்றும் வகையில், அதிக
சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் & அதிவேக பிரத்யேக சரக்கு
ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
லூதியானாவிலிருந்து டான்குனி வரை (1,875 கி.மீ.) கிழக்கு
வழித்தடம் மற்றும் தாத்ரி முதல் ஜவஹர்லால் நேரு
துறைமுகம்(1,506கி.மீ.) வரையிலான மேற்கு வழித்தடம் என,
இரண்டு பிரத்யேக சரக்கு ரயில்பாதைகளை அமைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. சாலைவழியாக மேற்கொள்ளப்படும் சரக்குப்
போக்குவரத்தை, சுற்றுச் சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்து
மூலம் மேற்கொள்ள ஏதுவாக, எதிர்காலத்தில், மேலும் பல
பிரத்யேக சரக்கு ரயில்பாதைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாம் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்போது, ரயில்வே துறை
பசுமை வழிமுறைகளை பெருமளவில் பயன்படுத்துவதில், அதிவேக
ரயில்கள் (புல்லட் ரயில்) முக்கியப் பங்கு வகிக்கும். மத்திய அரசு,
மும்பை -அகமதாபாத் அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு (508கி.மீ.)
அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக பயணிகள் போக்குவரத்து
அதிகமுள்ள சுமார் 5,000 கி.மீ. தூரமுள்ள மேலும் ஏழு
வழித்தடங்கள், அதிவேக ரயில் போக்குவரத்துக்கு அடையாளம்
காணப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
நாடு பெருந்தொற்று பாதிப்பை சந்தித்துவரும் வேளையில்,
“உயிர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை“ காப்பாற்ற வேண்டுமென்ற
நாடுதழுவிய அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ரயில்வேத்துறை
செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும்,

ரயில்வேத் துறை 73 லட்சம் டன் உணவு தானியங்களை எடுத்துச்
சென்றிருப்பதுடன், 241 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களையும்
இயக்கியதன் மூலம், 15,046 டன் ஆக்சிஜனை நாட்டின் பல்வேறு
பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளது.
குறிப்பாக, பசுமை முயற்சிகளை மேற்கொள்வதற்காக, ரயில்வே
துறைக்கும் இந்திய தொழில் கூட்டமைப்புக்கும் இடையே 2016-ம்
ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்
விளைவாக, பல்வேறு பணிமனைகள், உற்பத்திப் பிரிவுகள், என்ஜின்
பணிமனைகள் மற்றும் பண்டகசாலைகளுக்கு தொழிற்சாலை
மற்றும் உற்பத்திப் பிரிவுகளில், உலகிலேயே முதலாவதாக, ‘GreenCo’
சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த பசுமைச் சான்றிதழ், எரிசக்தி
சேமிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, பசுமை இல்ல வாயு
வெளியேற்றக் குறைப்பு, தண்ணீர் சேமிப்பு, கழிவு மேலாண்மை,
தளவாடப் பொருள் பாதுகாப்பு மற்றும் மறு சுழற்சி போன்ற
செயல்திறன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமான, இந்திய பசுமைக்
கட்டட குழுமம், 2001-ம் ஆண்டிலிருந்தே பசுமைக் கட்டட
இயக்கத்தை முன்னெடுத்து வருவதுடன், ரயில்வே கட்டடங்கள்
மற்றும் கட்டமைப்புகளை பசுமையாக்கும் முயற்சியிலும், இந்திய
ரயில்வேயுடன் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இந்தக் குழுமம், நாட்டில் இதுவரை சுமார் 7.8 பில்லியன் சதுர அடி
பரப்பளவில் பசுமை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதுடன்,
பசுமைக் கட்டட திட்டத்தில் உலகிலேயே இரண்டாவது நாடாக
இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியா தனது 75-வது சுதந்திர
தினத்தைக் கொண்டாடவுள்ள 2022-ம் ஆண்டுக்குள் 10 பில்லியன்
சதுரஅடி பரப்பில் பசுமை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிடும்.
ரயில் நிலையங்கள், அலுவலகங்கள், வளாகங்கள்,
மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள்
உட்பட இந்திய ரயில்வேக்குச் சொந்தமான பல்வேறு கட்டடங்கள் &
அமைப்புகள், பெருமளவுக்கு பசுமைக் கட்டடச் சான்றிதழைப்
பெற்றுள்ளன. இதன் காரணமாக, எரிசக்தி மற்றும் தண்ணீர்
பயன்பாடு, கணிசமாகக் குறைந்துள்ளது.

பசுமை முயற்சிகளை மேற்கொள்வதில், ரயில்வே துறை
தொலைநோக்குப் பார்வையுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க
முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்வே துறைக்கும்
இந்திய தொழில் கூட்டமைப்புக்கும் இடையிலான தனித்துவமிக்க
ஒத்துழைப்பு, பசுமை முயற்சிகளை நனவாக்க உதவும் என்பது
உறுதி.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *