கட்ட வேண்டுமா அல்லது வேண்டாமா – இதுவே கேள்வி

Loading

1947-ஆம் ஆண்டு 34 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை 2020-ம் ஆண்டில் 139 கோடியாகி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் அமைச்சகங்கள் 18-ல் இருந்து 51 ஆக உயர்ந்துள்ளன. லட்சத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களுடன் 66 லட்சமாக அதிகரித்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1952-ம் ஆண்டில் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 705 ஆக இருந்தது. ஆனால், 70 ஆண்டுகளில், 9.5 சதவீதம் என்ற மிதமான வளர்ச்சியுடன் 2021-ல் 772 உறுப்பினர்களாக உள்ளது. அதேசமயம், சுதந்திர இந்தியா பல பத்தாண்டுகளைக் கடந்து விட்ட போதிலும், பரந்து பட்ட நாட்டின் எண்ணற்ற பிரச்சினைகள் மக்களின் வாழ்க்கையில் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் உள்கட்டமைப்பு கடந்த 70 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த மத்திய அரசுகள், வரலாற்றின் தெளிவற்ற கண்ணோட்டத்துடன் முடங்கியிருந்த காரணத்தால், மத்திய விஸ்டா திட்டத்தில் ஒரு சதுர அடியைக்கூட கட்டமைக்கவில்லை. வரைபட அளவில் கூட திட்டமிடவில்லை. இதனால், நிர்வாகத் தேவைகள் மற்றும் நிர்வாகம் பாதிப்புக்குள்ளானது.

நமது நாடாளுமன்றத்தின் அளவு உலகத்தரத்துடன் ஒப்பிட்டால் மிகச் சிறியதாகும். 25 முதல் 40 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு தொகுதிக்கு எம்பி மட்டுமே பொறுப்பாக இருக்க வேண்டியுள்ளது. பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியைப் பின்பற்றும் நாம் அதனுடன் ஒப்பிட்டால், 7 கோடி மக்கள் தொகையைக் கொண்ட (இந்தியாவின் மக்கள் தொகையில் வெறும் 5%) அந்நாட்டின் நாடாளுமன்றம் 630 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொகுதி வரையறை ஆணையத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கடந்த காலத்தில், 1952, 1963, 1973, 2002 ஆகிய ஆண்டுகளில் நான்கு ஆணையங்கள் இதனை முடிவு செய்தன. 2026-ம் ஆண்டு மற்றொரு ஆணையம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யவுள்ளது. 2031-ம் ஆண்டு 800-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்கள் பெரிய அளவிலான நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நிலையில், இந்தியா இதற்கு தயாராக வேண்டாமா? எப்போது அதற்கான பணிகளைத் தொடங்குவது? இந்தியாவில் எதையும் செய்ய விடாமல் தடுக்கும் ஒரு பிளவுபட்ட கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. இந்த மாதிரி ஒரு சூழல் முன்பு இருந்திருந்தால், முதல் நாடாளுமன்றம் கூடாரத்தில்தான் நடந்திருக்கும்.

இந்தியாவுக்கு சிறு தொகுதிகளும், பெரிய நாடாளுமன்றமும் அவசியத் தேவையாகும். அதற்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அவசியமாகும். பெரிய, இடவசதி கொண்ட, மின்சாரத்தை சேமிக்கக்கூடிய கட்டிடமாக அது இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தற்போதைய செயலகத்தில் 51 அமைச்சகங்களில் 22 மட்டுமே இயங்கி வருகிறது. மற்றவை தில்லியின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அமைச்சகங்களுக்கிடையே சிறப்பான ஒத்துழைப்புக்கு அனைத்தையும் ஒரே கூரையில் இணைக்கும் வசதி அவசியமாகிறது. இதனால், போக்குவரத்து நேரம் மிச்சமாவதுடன், செலவும் வெகுவாகக் குறையும்.

தற்போது உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்படப் போவதாக ஒரு தவறான திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. தற்போதைய பழைய கட்டிடங்களில், நாடாளுமன்ற கட்டிடம், வடக்கு, தெற்கு பிளாக் கட்டிடங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு அப்படியே பராமரிக்கப்படும். இரண்டாவதாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம், ஒருங்கிணைந்த மத்திய செயலகம், எஸ்பிஜி வளாகம், பிரதமர், குடியரசு துணைத்தலைவர் இருப்பிடங்கள் ஆகியவை அவற்றின் பக்கத்திலேயே கட்டப்படும். மூன்றாவதாக, சில கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்படும். நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னர் கட்டப்பட்ட கிரிஷி பவன், நிர்மான் பவன், ரக்‌ஷா பவன், சாஸ்திரி பவன், உத்யோக் பவன், இந்திரா காந்தி தேசிய கலை மையம் ஆகியவை அழகியல் அற்புதங்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. மத்திய பொதுப்பணித் துறையால் பழுது பார்க்கப்பட்டு பராமரிக்கப்படும் சில கட்டிடங்கள் நவீன சூழலுக்கு ஏற்றவையாக இல்லை.

புதிய நாடாளுமன்றம் நவீன வசதிகளுடன் ரூ.971 கோடி (133 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் கட்டப்படவுள்ளது. நான்கு ஆண்டுகளில் உருவாகவுள்ள மத்திய விஸ்டா திட்டத்தின் முழு கட்டுமான செலவு ரூ.20,000 கோடியாக இருக்கும். அரசின் ஆண்டு வரி வருவாயான ரூ.20 லட்சம் கோடியில் இது வெறும் 0.25% மட்டுமே. சில விமர்சகர்கள் கூறுவது போல, நாட்டையே உலுக்கும் செலவோ, குற்றவியல் ஆதாயமோ இதில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தப் பெருந்தொற்று காலத்தில், இது தேவையா என்ற வாதமும் வைக்கப்படுகிறது. மக்களால் தேர்வு செய்யப்படாத மன்னர்கள், நவாப்புகள் ஆண்ட காலத்திலும், பெருந்தொற்று, வறுமை பீடித்த காலத்திலும், வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, இத்தகைய கட்டுமானங்களில் பணத்தை செலவிட்டதுண்டு. கட்டமைப்புகளை உருவாக்க இத்தகைய செலவுகள் அவசியமாகும். பெருந்தொற்றைக் காரணம் காட்டி, ரயில் பாதைகள், சாலைகள் அமைக்கும் பல்வேறு திட்டங்களை முடக்கி விட முடியுமா? ஒரு வகையில் இத்தகைய திட்டங்களை முடக்குவதும் பொருளாதார சிக்கலைத் தீவிரப்படுத்திவிடக்கூடும்.

தற்போதைய சூழலில் சுகாதாரத் திட்டங்களுக்கு அதிக பணத்தை செலவிட வேண்டும் என்று திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இது சரியானதே என்ற போதிலும், வெறும் பணத்தால் மட்டுமே பெருந்தொற்றை எதிர்த்துப் போராட முடியாது. பயிற்சி பெற்ற மருத்துவர்கள், மருத்துவமனை படுக்கைகள், உபகரணங்கள் ஆகியவை இதற்கு அவசியமாகும். இவற்றையெல்லாம், பணத்தை வீசி எறிந்து, ஒரே இரவில் பெற்று விட முடியாது. மருத்துவக் கட்டுமானங்களை உருவாக்குவது அவசர அவசியம்தான். ஆனால், அரசின் இயக்கத்தை முடக்கும் மனப்போக்கு நீடித்தால், மருத்துவக் கட்டுமானங்களை எவ்வாறு உருவாக்க முடியும்?

கார்கள் ஆடம்பர வாகனங்களாகவும், மெட்ரோ ரயில் தொடங்கப்படாத காலத்திலும் தற்போதைய பழைய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. இன்று, வர்த்தக மையங்களும், அரசு அலுவலகங்களும் போக்குவரத்து வசதி கொண்டதாக இருக்க வேண்டியது அவசியமாகும். அமையவிருக்கும் மத்திய விஸ்டா திட்டம், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு உகந்த வகையிலும், வாகனங்களை நிறுத்துமிட வசதிகள் கொண்டதாகவும் இருக்கும். இதனால், அரசு ஊழியர்கள், பார்வையாளர்கள் பயன் பெறுவார்கள். மேலும், போக்குவரத்து நெரிசல் குறையும். காற்று மாசு வெகுவாகக் குறையும்.

மத்திய விஸ்டா திட்டம் நடைபாதைகள், பாதசாரிகள் கடப்பதற்கு ஏற்ற சுரங்கப்பாதைகள், கால்வாய்களுக்கு மேல் பாலங்கள், மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையான சூழலில், நவீன வசதிகளுடன் உருவாகும். கடந்த 70 ஆண்டுகளில் இத்தகைய பசுமையான அழகிய கட்டுமானங்களை உருவாக்குவதை எது தடுத்தது?

மத்திய விஸ்டா திட்டத்தைப் பொறுத்தவரை வடிவமைப்பு , கட்டுமானம் ஆகியவை சிறப்பாகத் திட்டமிடப்பட்டு, இந்தியா கேட் கோபுரத்துக்கு மேல் உயராதவண்ணம் இருக்க வேண்டும் என்ற கட்டக்கலை கவுன்சிலின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல் வடிவம் பெறவுள்ளது. பிரபலமான ஆறு நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியதில், பிமல் பட்டேல் தலைமையிலான எச்சிபி வடிவமைப்பு திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதும் இப்போது வதந்தி பரப்புவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவரது பணியின் சிறப்பை காலம் நிரூபிக்கும்.

இந்த நிறுவனத்துக்கு தில்லி நகர்ப்புற கலை ஆணையத்தின் கருத்தியல் ஒப்புதல் கிடைத்துள்ளது. நிதி முடிவுகளுக்கு மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதி கிட்டியுள்ளது. நிதி ஒதுக்கீடு நிதி அமைச்சகத்திடம் இருந்து வழங்கப்படுகிறது. புதுதில்லி மாநகராட்சி திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்துள்ளது. திட்டப்பணிகளுக்கு மத்திய பொதுப்பணித்துறை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. சட்டபூர்வமான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மத்திய விஸ்டா திட்டம் குறித்த தேவையற்ற விமர்சனங்கள் உண்மைகளின் அடிப்படையிலானவை அல்ல. திட்டத்தைச் செயல்படுத்தும் காலம், சுற்றுச்சூழல், உயிரினப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையிலான விமர்சனங்களுக்கு தார்மீக அடிப்படை இல்லை என்பது வெளிப்படை. நம்மைச் சுரண்டிய காலனி ஆதிக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிய கட்டிடங்களை அழகியல் அற்புதங்கள் எனப் போற்றிப் புகழுபவர்கள் அடிமை மனப்பான்மையிலிருந்து இன்னும் மீளவில்லை என்றே கூறவேண்டும்.

சச்சின் ஶ்ரீதர்- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *