ஆத்தூரில் ச.ம.க., வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து; சரத்குமார் தேர்தல் பரப்புரை
சேலம் மாவட்டம், ஆத்தூர் தனி சட்டமன்ற தொகுதியின் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக சிவா (எ) சிவகுமார் போட்டியிடுகிறார். அதன்படி சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் அவர்கள் நேற்று ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் சிவகுமாருக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசியதாவது; இந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அமைத்திருக்கும் கூட்டணி மக்களுக்கான கூட்டணி. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சைமுத்து மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆகிய நானும் ஒரே கருத்தை கொண்டதாலே கூட்டணியை அமைத்துள்ளோம். கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு எதிர் கருத்துகளை கமல்ஹாசன் மீது முன் வைத்து பேசியிருக்கிறேன். ஆனால் தற்போது அமைத்துள்ள இந்த கூட்டணி கொள்கை ரீதியில் நாங்கள் ஒற்றை கருத்தை கொண்டதாலேயே கூட்டணி அமைத்துள்ளோம். இது மக்களுக்கான மக்களின் நலனுக்கான மகத்தான கூட்டணியாகும். திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. வாய்ப்புகளை வழங்கினால் தான் அவர்களின் திறமை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும். அதுபோல எங்களுக்கும் நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்கினால் நிச்சயம் தமிழகதை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்குவோம். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எப்படியாவது ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்று துடித்து வருகிறார். ஆனால் அது நிச்சயம் நிறைவேறாது. அதேபோல் உதயநிதி ஸ்டாலின் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி வருகிறார். அவர் அரசியல் நாகரிகம் கொண்டு பேச வேண்டும். மஞ்சை பையுடன் சென்னை வந்தவருக்கு இன்று மூட்டை மூட்டையாய் பணம் எப்படி வந்தது. அதை அவர்கள் வெளிப்படையாக மக்களுக்கு சொல்ல வேண்டும். தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே பாடுபடும் கட்சிதான் திமுக. மக்களை ஒருபோதும் சிந்தித்தது கிடையாது. ஆனால் தற்போது அமைந்திருக்கும் எங்கள் கூட்டணி மக்கள் நலனை மட்டுமே எண்ணக்கூடிய கூட்டணி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கமலஹாசன் அவர்களும், நாங்களும் தொலைநோக்கு பார்வையுடன் பல எண்ணற்ற திட்டங்களை வகுத்து, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் என்று பேசினார். மேலும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக உருவாக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சிவகுமார் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் இடையே கேட்டுக்கொண்டார்.