இவரைப் போல ஒருவர் சமகாலத்தில் இல்லை. அத்தனை தனித்துவம் மிக்கவர் ஜனநாதன். எப்படி? ஏன்?
இயக்குனர் ஜனநாதன் மறைந்துவிட்டார். இயக்குனராக இவர் கொடுத்திருப்பது நான்கு படங்கள் மட்டுமே. ஆனாலும் இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. இவரைப் போல ஒருவர் சமகாலத்தில் இல்லை. அத்தனை தனித்துவம் மிக்கவர் ஜனநாதன். எப்படி? ஏன்?
தனது நாற்பது வயதுக்கு மேல்தான் ‘இயற்கை’ படத்தை முதல் படமாகக் கொடுத்தார் ஜனநாதன். ஷ்யாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகிய நடிகர்களோடு ஒரு சிறிய படமாகத்தான் வெளியானது ‘இயற்கை’. சீமா பிஸ்வாஸ் நடித்திருக்கிறார் என்ற செய்தி சற்றே கவனத்தை ஈர்த்தது. அப்போது உச்சத்தில் இருந்த இசையமைப்பாளர் வித்யா சாகரின் பாடல்கள் கூடுதல் கவனத்தை தந்தன. படம் வெளிவந்த பிறகு ஒரு அழகிய புதினம் போன்ற திரைக்கதை, மிகவும் புதிய கதைக்களம் என பாராட்டை பெற்றது. வெற்றிதான் என்றாலும் பெரிய சூப்பர் ஹிட் இல்லை. தேசிய விருதை பெற்றது. படத்தின் தெளிவும் தனித்தன்மையும் ஜனநாதனை ஒரு நம்பிக்கை தரும் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தன.
இவரது அடுத்த படமான ‘ஈ’, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக விஜயகாந்த், அஜித், சிம்பு படங்களுடன் வெளியாகி வெற்றி பெற்றது. இவரது பொதுவுடைமை கருத்துகள், உலக அரசியல் பார்வை உள்ளிட்டவை முழுமையாக வெளிவந்த படமாக ‘ஈ’ அமைந்தது. சென்னையின் ஒரு மூலையில் உள்ள குப்பத்தை உலக அரசியல் எவ்வாறு பாதிக்கிறது, உலக வியாபாரம் எப்படி எளிய மக்களை சோதனை எலிகளாக்குகிறது என்று பசுபதி ஏற்ற ‘நெல்லை மணி’ பாத்திரத்தின் மூலம் விளக்கிய ஜனநாதனின் முக்கியத்துவத்தை இந்தப் படம் சொல்லியது. 80களில் பொதுவுடைமை பேசிய பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ‘ஹீரோ ஒரு தொழிலாளி, முதலாளி பொண்ணை லவ் பண்ணுவார்’ என்ற அளவில் பேசப்பட்டு வந்த வர்க்க அரசியலை தெளிவான புரிதலோடும் வீச்சோடும் அதே நேரம் சுவாரசியமான விறுவிறு திரைக்கதையோடு சொன்னவர் ஜனநாதன்.
இவரது கருத்துகளை சுமந்து வந்த கலைக்கு உச்சமான வெற்றியை கொடுத்தது ‘பேராண்மை’ படம். ஜெயம் ரவி நடிப்பில் வந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு படத்துக்கும் பெரிய இடைவெளி விட்டே அடுத்த படத்தை இயக்கினார். அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். “எனக்கு சினிமா வியாபாரம் அல்ல, அதன் மூலம் கோடி கோடியாக சம்பாரிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. இந்த மிகப்பெரிய ஊடகத்தில் நான் நம்பும் அரசியலை பேச வேண்டும். அதுதான் என் நோக்கம்” என்றார். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சொன்ன கதை ரஜினிக்கும் பிடித்தது. ஆனால், அதன் பின்னர் வேறு சிலரிடம் ஆலோசித்த ரஜினி, இவரது படத்தில் பேசப்படும் அரசியல் குறித்த தயக்கத்தால் அந்தக் கதையை கைவிட்டார். தன் அரசியலும் கருத்தும் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை சென்றடையும் என்ற ஆவலில் தயக்கமில்லாமல் ரஜினிக்கு கதை சொன்னார் ஜனநாதன். நேரடி அரசியல் பேசும் படங்களாக இருந்தாலும் ஒரு போதும் வெறுப்பை விதைத்ததில்லை இவரது படங்கள். அதுதான் ஜனநாதனின் திரைத்தனித்தன்மை. இவரது இயக்கத்தில் வெளிவந்த கடைசி படமான ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’, எழுத்தில் வெளியான ‘பூலோகம்’ படங்களும் புதிய களங்களில் மக்கள் அரசியலை பேசின. இயக்கி, இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் ‘லாபம்’ படமும் அந்த அரசியலைத்தான் பேசும் என்பது உறுதி.
திரையை தாண்டி மிக இயல்பான மனிதராக, எந்த நிலையிலும் கொள்கை போற்றும் தோழராகவே இருந்தார் ஜனா. தன் திறமை குறித்தோ, தனது இயக்கம் குறித்தோ எந்தப் பெருமையும் கொள்ளாதவர் அவர். தனது படத்தின் பாடல்கள் குறித்து பேசும்போது, “என் படத்துல பாட்டு நல்லாருக்காதுன்னு நிறைய பேர் சொன்னாங்க. என்னடான்னு யோசிச்சுப் பார்த்தா நான் அதுல அதிகமா ஈடுபட்டிருக்கேன். நான் ஈடுபட்டா பாட்டு நல்லாருக்காது. முதல் படமான ‘இயற்கை’ல வித்யாசாகர்- வைரமுத்து ன்னு பெரிய ஆளுங்க இருந்தாங்க. அவங்களே முடிவெடுத்தாங்க. அதுனால ‘காதல் வந்தால்…’ பாட்டு ரொம்ப நல்லா அமைஞ்சது” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
“என்னை சில பேர் நல்லவர், நல்லவர்னு சொல்லுவாங்க நான் ஸ்கூல் முடிச்சுட்டு எங்க வட்டத்துல ஒரு கட்சியோட இளைஞர் அணி செயலாளரா இருந்தேன். அப்போ பட்டாணி விப்பேன், சைட்ல சாராயமும் வித்தேன். என்னை இப்போ சில பேர் ரொம்ப நல்லவர், எளிமையானவர்னு சொல்றாங்க. அவுங்க இதையும் தெரிஞ்சுக்கணும்” என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் சொன்னவர் ஜனநாதன். நண்பர்கள், உதவி இயக்குனர்கள், சினிமா சூழ வாழ்ந்த இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது திரைப்படங்களாலும் இயல்பாலும் மிகுந்த தனித்துவம் வாய்ந்திருந்த ஜனநாதன் போல இன்னொருவர் தமிழ் சினிமாவில் இல்லை என்பது உண்மை.