அதிசய தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ….
அதிசய தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ-வை, கட்சித் தலைவர் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அறிமுகப்படுத்தினார்.
2021 சட்டமன்ற தேர்தலில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் சின்னமான ரோபோ-வை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு ஆகியவை சென்னையில் நடைபெற்றது.
அதிசய தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ-வை, கட்சித் தலைவர் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அறிமுகப்படுத்தினார்.
அந்த ரோபோ, தான் சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது எவ்வாறு வாக்களர்களை சந்திக்கும்? என்ற செயல் விளக்கமும் இதில் காண்பிக்கப்பட்டது.
“தமிழகத்தில் மாற்றம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்பதை இலக்காக கொண்ட, அக்கட்சியின் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, கட்சியின் தலைவர் டாக்டர்.ரா.அர்ஜுனமூர்த்தி வெளியிட்டார். இ.ம.மு.க-வின் சிகரம் தொடும் சிறப்புத் திட்டமான “பசுனீஹ் புரட்சி” என்ற தனித்துவமான திட்டத்தின் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு தினசரி 500 மி.லி முதல் 1 லிட்டர் வரையிலான இலவச பால் வழங்கும் திட்டம், தகுதியின் அடிப்படையில் ஒரு விவசாயிக்கு அரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, குத்தகைக்கு வழங்குவது, 4 நாட்டு இன பசு மாடுகள் இலவசமாக வழங்குவது, மண்வளம் காத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது, இலவச வீடு வழங்கிடும் நல்லோர் குடியிருப்பு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
மாவட்டந்தோறும் 50 ஏக்கர் பரப்பில் சர்வதேச தரத்திலான விளையாட்டு வளாகம், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, முதியோர் உதவி தொகை, மாத வருவாய் ரூ.20,000/-க்கு கீழ் குடும்பத்திற்கு சிறப்பு திட்டம், மாணவர்களுக்கு eMarket Card, இந்து கோவில் சாமி தரிசனத்தில் வாகன நிறுத்தம், காலணி பாதுகாத்தல் உள்ளிட்டவைக்கு கட்டண ரத்து, என தமிழக முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப் படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.