ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.

Loading

கோவை : கோவை, ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.

ஈஷாவில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு, கடந்த, 8ம் தேதி, ‘யக் ஷா’ விழாவுடன் துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது. அதில், ஹிந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரவர்த்தியின் வாய்ப்பாட்டு, சந்தீப் நாராயண் இசை மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

மஹா சிவராத்திரி விழா, நேற்று மாலை, 6:00 மணிக்கு பஞ்சபூத ஆராதனையுடன் துவங்கியது. ‘கொரோனா’ தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான, உடல் வெப்ப நிலை பரிசோதனை, சமூக இடைவெளியுடன், 112 அடி ஆதியோகி சிலை முன் விழா நடந்தது. சத்குரு யோகா வேள்வியை ஏற்றி வைத்தார். லிங்க பைரவி யாத்திரை, தியானம், சத்சங்கம், ஆதியோகி தரிசன காட்சிகள் நடந்தன.

நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன் குழுவினரின் பறையாட்டம், தெலுங்கு பாடகி மங்களி, ராஜஸ்தானிய கலைஞர் குட்லே கான், பாடகர் பார்த்தீப் ஹோஹில், கபீர் கபே இசைக் குழுவினர் நிகழ்ச்சிகள் களை கட்டின.விழாவை துவக்கி வைத்து சத்குரு பேசுகையில், ”மஹா சிவராத்திரி திருநாளில், சிவனின் அருளும், ஆதியோகியின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கட்டும். ”படைத்தலின் மூலமான சிவனை கொண்டாடும் திருநாளில், மனிதர்களின் உயிர் சக்தியானது இயற்கையாகவே மேல் நோக்கி நகரும். இன்றைய (நேற்று) இரவு முழுவதும் முதுகு தண்டை நேராக வைத்து, விழிப்பாக இருந்தால், அளவிட முடியாத பலன்களை பெறலாம்,என்றார்.

நிகழ்ச்சிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ரஷ்யன், சைனீஸ் என, 13 மொழிகளில் நேரடியாக ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. பா.ஜ., மாநில துணைத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *