சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

Loading

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

மகாகவி பாரதிநகரில் 30 கிலோ கஞ்சாவுடன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் கைது.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், 11.02.2021 அன்று மதியம், வியாசர்பாடி, புதுநகர் ‘A‘ பிளாக் அருகில் பணியில் இருந்தபோது, அவ்வழியே வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த 1.ராதாகிருஷ்ணன், வ/36, த/பெ.காளிதாஸ், சோழவரம், திருவள்ளூர் மாவட்டம், 2.பிரசாந்த், வ/28, த/பெ.ஜெயகுமார், புதுநகர் ‘A‘ பிளாக், வியாசர்பாடி, 3.மாயகிருஷ்ணன், வ/30, த/பெ.முனுசாமி, தாமோதரன் நகர், வியாசர்பாடி ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 கிலோ எடை கொண்ட கஞ்சா, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

மயிலாப்பூரில் வயதான பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி கவனத்தை திசை திருப்பி தங்க நகைகள் திருடிய நபர் கைது.

திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் ரோடு, எண்.22/61 என்ற முகவரியில் வசிக்கும் நீலாவதி, பெ/வ.63, க/பெ.சண்முகம் என்பவர் கடந்த 15.01.2021 அன்று காலை, மயிலாப்பூர், சிட்டி சென்டர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் மூதாட்டி நீலாவதியிடம் தங்கள் குழந்தைகளை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் எனவும், ஆசீர்வாதம் செய்யும்பொழுது தங்க நகைகளை எதுவும் அணியாமல் கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி அவரது தங்க கம்மலை ஏமாற்றி சென்றுள்ளளார். இது குறித்து நீலாவதி E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி குற்றத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் திரு.இளையராஜா மற்றும் காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் தீவிர விசாரணை செய்தும், தேடுதலில் ஈடுபட்டும் மேற்படி வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகள் மற்றும் பணத்தை அபகரித்த திருமலை, வ/36, த/பெ.பாலாஜி, எண்.29, சத்திபாமா தெரு, பெரம்பூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 சவரன் எடை கொண்ட தங்க நகைகள், பணம் ரூ.2,400/- மற்றும் 1 ஜதை வெள்ளிக் கொலுசு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், குற்றவாளி திருமலை இது போல, E-1 மயிலாப்பூர், D-3 ஐஸ் அவுஸ் மற்றும் B-2 எஸ்பிளனேடு ஆகிய காவல் நிலையங்களில் இதே போல வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.

எண்ணூரில் பல் மருத்துவரின் வீட்டை உடைத்து திருடிய 5 நபர்கள் கைது. 5 சவரன் தங்க நகை, 394 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.60,500/- பறிமுதல்.

சென்னை, எர்ணாவூர், ஶ்ரீரங்கம் நியூடவுன், 2வது பிரதான சாலை, எண்.H-11 என்ற முகவரியில் பல் மருத்துவர் ஜெயபிரகாஷ், வ/39, த/பெ.சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். மருத்துவர் ஜெயபிரகாஷ் கடந்த 07.02.2021 அன்று மதியம் அவரது வீட்டை பூட்டி வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கிரில் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே நுழைந்து, வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமார் 32 சவரன் தங்க நகைகள், 394 கிராம் வெள்ளி பொருட்கள், பணம் ரூ.5 லட்சம் , சிசிடிவி கேமரா மற்றும் அதன் DVR ஆகியவை திருடு போயிருந்தது. இது குறித்து ஜெயபிரகாஷ் M-5 எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

M-5 எண்ணூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.மனோகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை செய்ததில், மருத்துவர் வசிக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசிக்கும் சூரியநாராயணன் என்பவர் மருத்துவர் வெளியே செல்வதை அறிந்து, அவருக்கு தெரிந்த நபரான ராதாகிருஷ்ணன் என்பவரை வைத்து மேற்படி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்பேரில், 1.சூரியநாராயணன், வ/29, த/பெ.ராமமூர்த்தி, H-11, ஶ்ரீரங்கம் நியூ டவுன், 2வது பிரதான சாலை, எர்ணாவூர், 2.பிரேமா ராணி, பெ/வ.28, க/பெ.ராதா கிருஷ்ணன், ஶ்ரீபாலாஜி நகர், அண்ணாநகர் மோரை, ஆவடி, சென்னை, 3.சுசிலா, பெ/வ.61, க/பெ.ராமமூர்த்தி, ஶ்ரீபாலாஜி நகர், அண்ணாநகர் மோரை, ஆவடி, 4.பத்மாவதி, பெ/வ.48, க/பெ.கேசவன், அன்னை சத்யாநகர், பட்டாபிராம், 5.விஜயலஷ்மி, பெ/வ47, க/பெ.ஜெயகிருஷ்ணன், சின்ன எர்ணாவூர், சென்னை ஆகிய 5 நபர்களை 12.02.2021 அன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள், 394 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.60,500/- பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ராதாகிருஷ்ணன் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் விரைந்துள்ளனர்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (16.02.2021) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *