திருவள்ளுர் மாவட்டத்தில் சென்னை வெளிவட்ட ஆறு வழித்தட பிரதான சாலை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் :
திருவள்ளுர் பிப் 09 : மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகி வரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும் மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக ரூ. 1075 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி (தேசிய நெடுஞ்சாலை 716) முதல் பாடியநல்லூர் (தேசிய நெடுஞ்சாலை 16) வழியாக திருவொற்றியயூர் – பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான
சாலையினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இச்சாலையின் இரு பக்கமும் அமைந்துள்ள 28 கிராமங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் பயன் பெறுகிறார்கள். இச்சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதின் வாயிலாக தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலிருந்து எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் பிற வட தமிழக தொழிற் பகுதிகளுக்கு வரும் கனரக பெட்டக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களால் சென்னை புறநகர் பகுதி சாலைகளில் ஏற்படும் போக்;குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்து அதனால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும்.
இதில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா கலந்துகொண்டு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன பொது மேலாளர் ஞானசேகரன் (ஓய்வு), குழுத்தலைவர் பி.மனோகர் (ஓய்வு), உறுப்பினர் ஜி.வி.;ஆர்.ரவி, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள கலந்துகொண்டனர்.