ஊழல் புகாருக்கு ஆளாகி மாற்றம் ஆன ஆதிதிராவிட நல அலுவலரை பணிநீக்கம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் விஷ்ணுபிரசாத் எம்பி மனு…
திருவண்ணாமலை பிப்.8.
சமையலர் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கரை தற்காலிக பணி நீக்கம் செய்யக் கோரி ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 42 சமையலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கர் மீது வந்தவாசியைச் சேர்ந்த ராஜமான்சிங் என்பவர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து ஊழல் புகாருக்கு ஆளான மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கர் தருமபுரி மாவட்ட திட்ட அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை பணிநீக்கம் செய்து அவர் வாங்கிய லஞ்சப்பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத், பணிமாற்றம் செய்யப்பட்ட அலுவலர் கதிர்சங்கரை பணி நீக்கம் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் கதிர்சங்கர் விடுதிகளில் உள்ள இரவு காவலர் பணியிடங்களை மறைத்து அவர்களுக்கு சமையலர்களில் இருந்து பதவி உயர்வு வழங்கி கூடுதல் பணியிடங்களை உருவாக்கி பணிநியமனம் வழங்குவதாக ஒரு பதவிக்கு ரூபாய் பத்து லட்சம் வீதம் லஞ்சம் பெற்றதாக பாதிக்கப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு துறைக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்துள்ளார்.
இது மட்டுமன்றி கடந்த மார்ச் 2020-ல் விடுதிகளின் மின்சார கட்டணத்திற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு அதிலும் மோசடி வேலை செய்து 50 சதவீதம் கமிஷன் தொகையினை அவரும், அவரது அலுவலகத்தில் உள்ளவர்களும் பெற்றுள்ளனர். இதுபற்றி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2020-ல் பள்ளிகள் மற்றும் விடுதிகள் செயல்படாதநிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உணவு கட்டணம் ஒரு கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை போலியான முறையில் பணமாக்கப்பட்டு அதில் 50 சதவீத தொகையினை முறைகேடு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் ஆண்கள், பெண்கள், விதவைகள், இராணுவத்தினர் பற்றி விளம்பரம் செய்யாமல் முறைகேடு செய்வதற்காக ஒப்புக்காக நேர்காணல் நடத்தி சமையலர் பணிக்கு ரூபாய் பத்து லட்சம் வீதம் வசூல் செய்து ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கதிர்சங்கரை உடனே பணிநீக்கம் செய்து அவரால் நடத்தப்பட்ட சமையலர் பணிக்கான நேர்க்காணலை உடனே ரத்து செய்த இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். ஒப்புக்காக நடத்தப்பட்ட சமையலர் பணிக்கான நேர்காணலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
பின்னர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆதிதிராவிடர் நலத் துறையில் 42 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற நேர்காணலில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பதாக நிறைய புகார்கள் வந்துள்ளது. எனவே இந்த நேர்காணலை ரத்து செய்து நேர்மையான முறையில் இடஒதுக்கீடு, தகுதிக்கேற்றால் போல் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். முறைகேடு செய்த செய்த கதரிசங்கரை இடமாற்றம் செய்தால் மட்டும் போதாது, அவரை தற்காலிக பணி நீக்கம் செய்திட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்றார்.
பேட்டியின்போது காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் வி.பி.அண்ணாமலை, மாவட்ட துணைத் தலைவர் வி.கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.