திருவள்ளூரில் மாதிரி வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு :
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப் பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தற்போது விறுவி்றுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8423 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 6826 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 6926 ( விவிபிஏடி) காகித சோதனை செய்யும் இயந்திரம் என மொத்தம் 22 ஆயிரத்து 175 இயந்திரங்களை திருவள்ளூரில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் மாதிரி வாக்குப்பதிவினை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா துவக்கி வைத்து விளக்கி காட்டினார்.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள். கன்ட்ரோல் யூனிட் மற்றும் வாக்காளர் சரி பார்க்கும் இயந்திரம் அனைத்தும் சரிவர செயல்படுகிறதா என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி,திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.