மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 72ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்

Loading

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 72ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்தவித சுமூக உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் 40 விவசாய சங்கங்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். பொது சொத்துக்கள் சேதம் அடைந்தன. வன்முறை தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க போலீசார் தடுப்பு வேலிகளை ஏற்படுத்தி உள்ளனர். எல்லைப் பகுதியான காஜிப்பூரில் சாலைகளுக்கு நடுவே முள்வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும் டெல்லி எல்லைகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தண்ணீர், கழிவறை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆனாலும் விவசாயிகள் மனம் தளராமல் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பெருமளவில் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

* வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.

* விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

* சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

* குடியரசு தினத்தன்று, டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது தொடர்பாக விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யவேண்டும்.

இந்த கூட்டத்தில் பாரதீய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பேசியதாவது:-

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் நீடிப்பது கடினமாகிவிடும். எங்களது போராட்டம் நீடித்தால் மத்திய அரசு அகற்றப்பட்டு விடும்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு நபரை அனுப்ப வேண்டும். இந்த சட்டங்களை திரும்ப பெறாதவரை எங்களது போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம். எங்களது போராட்டம் மேலும் வலுவாக மாறும்.

அமைதியான வழியில் தான் எங்களது போராட்டம் இருக்கும். வன்முறைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *