திருவண்ணாமலை அருகே சிறந்த சமூக பணியில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா,,,,,,,
திருவண்ணாமலை மாவட்டம் பரமனந்தல் கிராமத்தில் பாப்பாத்திஅம்மாள் – கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை 3-ம் ஆண்டு தொடக்கவிழா, சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ப.கி.தனஞ்செயன் தலைமை தாங்கினார். ப.கி.ஏழுமலை வரவேற்று பேசினார்.
விழாவில் டெல்லி தமிழ்ச்சங்கம் செயற்குழு உறுப்பினர் முகிலனுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதும், மாவட்ட கல்வி அலுவலகம் பள்ளி துணை ஆய்வாளர் ஜி.குமாருக்கு மாமன்னர் மருதுபாண்டியர் விருதும்,பாரத் வித்யாலயா கலைக்கல்லூரி முதல்வர் வே.ராமுவுக்கு கல்வியாளர் ஏ.லட்சுமண சுவாமி முதலியார் விருதும், கடலாடி ஊராட்சி செயலாளர் ல.செந்திலுக்கு அசோக சக்கரவர்த்தி விருதும், திருவண்ணாமலை பெண்கள் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகி சசிகலாவுக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இவ்விருதினை விஸ்வாமித்ரர் தவச்சாலையின் நிர்வாகி தவத்திரு வேதபுரி கண்ணப்ப சுவாமிகள் மற்றும் பேராசிரியர் செந்தில்வேலன் , சென்னை வினோத்குமார், நாயுடுமங்கலம் தொழிலதிபர் லட்சுமணன் , பரமனந்தல் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் மூர்த்தி ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினர்.
செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.சரவணகுமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரமனந்தல் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.அவர் பேசும்போது,பெற்றோரை மதித்து மாணவர்கள் நடக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து நடந்து செல்லவேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் நட்புணர்வை கடைபிடிக்க வேண்டும். எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவி தேவைப்பட்டால் உடனே தொடர்புகொண்டு பயனடைய வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் செந்தில்வேலன் கலந்து கொண்டு நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல்களை பாடினார்.
அன்னதான நிகழ்ச்சியினை அண்ணாமலையார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பி.அரிதாஸ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பரமனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.ராமநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஓய்வு) கருணாகரன், செங்கம் இளநிலை மின்பொறியாளர் சோலசாரதி, பாலாஜி, வி.ராஜா, பிரதோஷ அறக்கட்டளை தலைவர் திருமால், பொருளாளர் காந்தி, ஓம்சக்தி சிவா, காயம்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜி, வனவர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினர்.
விழா ஏற்பாட்டினை ச.இமயவர்மன் செய்திருந்தார்.
முடிவில் அறங்காவலர் ப.கி.சேட்டு நன்றி கூறினார்.