தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன் கோரிக்கை.

Loading

திருச்சி:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் ஜி.வி.மணிமாறன் கூறினார்.
அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளரும், கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளருமான ஜி.வி. மணிமாறன் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளரிடம் கூறியதாவது:

மத்திய அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை 5ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளிப்படையான கருத்துக்களை தெரிவிக்க தொடங்கிவிட்டது. மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் முதலீடுகளை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நாட்டின் வங்கியல் செயல்பாடுகள் பெரும் பாதிப்புகளை சந்திக்கும். இதன் மூலம் பொதுமக்களுக்கு வங்கிகளின் சேவை எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் சிதைக்கப்படும். நாட்டிலிருந்த 27 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் 13 என்ற நிலையை அடைந்தது. தற்போது இதை மேலும் 5 என்ற எண்ணிக்கையாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது நியாயமற்ற செயலாகும். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் வங்கி சேவைகளை பெறுவதும், கடன் பெறுவதும் சிம்ம சொப்பனம் ஆகிவிடும். பொதுமக்களின் முதலீடுகளுக்கு குறைவான வட்டியும், கடன்களுக்கு அதிகப்படியான வட்டியும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே தற்போது உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அந்த நிலையிலேயே தொடர வேண்டும். மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது நாட்டில் இல்லை.
அதேபோல் அரசு முதலீடுகளை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகளின் செயல்பாட்டில் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. அதனால் வங்கி தொழிற்சங்கங்கள் தங்களது தனிப்பட்ட கோரிக்கைகளுக்கு மட்டுமே போராடி வந்தன. ஆனால் தற்போதைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் வங்கிகளை காப்பாற்றவே போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வங்கி அதிகாரிகளை அரசு அதிகாரிகளை போல் நடத்த வேண்டும். அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும் போது கிடைக்கப்பெறும் பணப் பலன்களுக்கு வரி கிடையாது. ஆனால் வங்கி அதிகாரிகள் ஓய்வு பெறும் போது கிடைக்கப்பெறும் பண பலன்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதுபோல் பல்வேறு வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் வங்கி அதிகாரிகளை அரசு அதிகாரிகளை போல் மத்திய அரசு நடத்த வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு கிடைக்கும் பயன்கள் அனைத்தும் வங்கி அதிகாரிகளுக்கும் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது கனரா வங்கி அதிகாரிகள் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் தியாகராஜன், திருச்சி பிராந்திய செயலாளர் ராஜகோபால், ஓய்வுபெற்ற கனரா வங்கி ஊழியர் வெங்கடசுப்ரமனியன் (ஆர்விஎஸ்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *