திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தைகள் இதய பரிசோதனைக்கு “எக்கோ” கருவி எம்.பி. திருச்சி சிவா வழங்கினார்
குழந்தைகள் இதய பரிசோதனைக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான எக்கோ கருவியை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியிலிருந்து பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து குழந்தைகளுக்கும் இதய பரிசோதனை செய்யக்கூடிய எக்கோ கருவி வாங்கப்பட்டுள்ளது.
இந்த கருவி ஒப்படைக்கும் நிகழ்ச்சி என்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எக்கோ கருவியை நோயாளிகள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஏழைகளின் ஆலயமாக அரசு மருத்துவமனைகள் விளங்குகின்ற. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் கடவுள்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் நோய்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்காக சிகிச்சை அளிக்க போதுமான கருவிகள் மருத்துவமனைகளில் இருந்தாலும், கோடிக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கைவசம் இருக்கும் உபகரணங்களை கொண்டு அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் தவிக்கும் நிலை உள்ளது. இதேபோல் பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய இக்கருவி இல்லை என்ற தகவல் எனக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அந்த கருவி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கருவியின் மூலம் பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து குழந்தைகளுக்கும் இதயம் தொடர்பான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றார். இந்த விழாவில் மருத்துவமனை முதல்வர் வனிதா பேசுகையில், தினமும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 15 முதல் 20 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 5 முதல் 10 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதிக அளவிலான உபகரணங்களை அரசு வழங்கியுள்ளது. டாக்டர்களும் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகின்றனர். கடந்த மாதம் பத்துக்கும் குறைவாக பிறந்த குழந்தைகள் இறந்துள்ளது. மாதத்திற்கு 500 குழந்தைகள் இங்கு உள்நோயாளியாக சேர்க்கப்படுகிறது. இதில் 200 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் 10 குழந்தைகள் இதய நோயுடன் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதய நோய் காரணமாக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தான் தற்போது எக்கோ கருவி குழந்தைகள் நலப்பிரிவு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனைக்கு இந்த கருவி வந்துவிட்டதால் குழந்தைகளுக்கு உடனடியாக பரிசோதனை செய்து அறுவை சிகிச்சையையும் உடனடியாக செய்ய உதவியாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் எட்வினா, குழந்தைகள் நலப்பிரிவு துறை துணைத் தலைவர் சிராஜூதீன் நசீர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.