சோமம்பட்டு மற்றும் ஞாயிறு ஆகிய ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக் : மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார் :
திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டு ஊராட்சியில் ஒரு முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஞாயிறு ஊராட்சியில் ஒரு மினி கிளினிக் துவங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 17 அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த அம்மா மினி கிளினிக்குகள் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் காலை 8 மணிமுதல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் 8 மணி வரையிலும், ஊரகப்பகுதிகளில் காலை 8 மணிமுதல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் 7 மணி வரையிலும் செயல்படும். இந்த அம்மா மினி கிளினிக் வாரத்தில் 6 நாட்களும்; செயல்படும். சனிக்கிழமை அன்று விடுமுறை நாளாகும்.
இந்த அம்மா மினி கிளினிக்கிள் மருத்துவ அலுவலர் – 1, செவிலியர் – 1 மற்றும் மருத்துவ உதவியாளர் – 1 ஆகிய பணியாளர்களை கொண்டு செயல்படுகின்றது.
இதில் கர்ப்பகால மற்றும் பிரசவ பிற்கால பராமரிப்பு, சிசுபராமரிப்பு, குழந்தைகள் மற்றும் வளரினம் பருவத்தினருக்கான பராமரிப்பு, குடும்ப நல சேவைகள், தொற்று நோய்க்கான சிகிச்சை, சிறுநோய்களுக்கான சிகிச்சை, தொற்றா நோய்கள் மற்றும் பொதுவான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் மேற்சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், முதியோர் பராமரிப்பு, விபத்து மற்றும் அவசர மருத்துவ முதலுதவி, வெறிநாய் கடிக்கான தடுப்பூசி அளித்தல், ஆய்வக பரிசோதனைகள்; மற்றும் இரத்த சர்க்கரை அளவு – சிறுநீரில் புரதத்தின் அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு, கர்ப்பத்தை உறுதி செய்யும் சிறுநீர் பரிசோதனை, மலேரியா இரத்தத் தடவல், ஹிமோகுளோபின் அளவு, காசநோய்க்கான சளி மாதிரிகள் சேகரித்தல் ஆகியவை மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன என்று ஆட்சியர் கூறினார்.
இதில் திருவள்ளுர் சுகாதார பொது சுகாதாரம் திருவள்ளூர் மாவட்ட துணை இயக்குநர் ஜவஹர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.