திமுக ஆட்சி அமைந்தவுடன் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் திருச்சி திமுக தில்லைநகர் பகுதி கிராம சபை கூட்டத்தில் கே.என்.நேரு உறுதி.
திருச்சி: திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறினார்.
மக்கள் கிராமசபை கூட்டம் திருச்சி உறையூர் கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம் மற்றும் புத்தூர் சண்முகா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி 52 52ஏ ஆகிய வார்டுகளை சேர்ந்த வண்ணாரப்பேட்டை எம்ஜிஆர் நகர், கல்லாங்காடு, பாரதிநகர், சீனிவாசன் நகர், குமரன் நகர் அம்மையப்ப நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். தங்களது வார்டுகளில் கழிப்பிடம், மழைநீர் வடிகால், சாக்கடை, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் நேரு பேசுகையில், திருச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தவித திட்டங்களும் திருச்சிக்கு கொண்டுவரப்படவில்லை. திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டுமே திருச்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். எந்தவித சாதனைகளையும் அவர்களால் கூறி வாக்கு கேட்க முடியவில்லை. அவர்கள் கூறிய எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் திருச்சி மாநகரம் பெருநகரமாக வளர்ச்சி அடையும். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கண்டிப்பாக செய்து தருவார். திருச்சியில் அடிப்படை தேவைகளை திமுக ஆட்சியில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் அவர்கள் சார்ந்த துறைகளை கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் வசம் வைத்துள்ளனர். ஆனால் அந்த துறை சார்ந்து எவ்வித முன்னேற்றங்களும் திட்டங்களும் அவர்கள் செய்யவில்லை. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3000 பேர் பணியாற்றுகிறார்கள். அதேபோல் தபால் நிலையங்கள், வங்கிகள் என வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள். தமிழர்கள் இங்கு இடம் இல்லை. அதேபோல் புதிய கல்விக்கொள்கை, வேளாண் சட்டங்கள், நீட்தேர்வு போன்றவற்றை அச்சம் காரணமாக அதிமுக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, துணைச்செயலாளர் விஜயா ஜெயராஜ், திமுக தில்லை நகர் பகுதி செயலாளர் கண்ணன், உறையூர் பகுதி செயலாளர் இளங்கோவன், வட்ட செயலாளர்கள் வண்ணாரப்பேட்டை மோகன், புத்தூர் பவுல்ராஜ், எஸ்விஆர் வரதராஜன், புத்தூர் தர்மராஜன், ஜான்சன், தில்லை மெடிகல்ஸ் மனோகரன், மோகன்ராஜ், ரவிசங்கர், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.