திருச்சியில் பொங்கல் பரிசுத் திட்டத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தொடங்கி வைத்தனர்
திருச்சியில் பொங்கல் பரிசு விநியோகத் திட்டத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 2,500 ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக வீடுகள்தோறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஏற்கனவே டோக்கன் வினியோகம் செய்யும் பணி முடிந்துவிட்டது. இதைத்தொடர்ந்து பொங்கல் பொருட்கள் வினியோக பணி நேற்று முதல் தொடங்கியது. இந்த திட்டத்தை திருச்சி பாலக்கரை அருகே அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 8 லட்சத்து 3 ஆயிரத்து 355 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,225 ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.இன்று நடந்த தொடக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், 2019-20 ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் 2020ஆம் ஆண்டு கரோனா காரணமாக ஆயிரம் ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரோனாவால் வெகுவாக பாதித்துள்ள மக்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கரோனா ஊரடங்கு மற்றும் நிரவி புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிய தமிழக மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். விழாவில் அமைச்சர் வளர்மதி பேசுகையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த ஆண்டு 2,500 ரூபாயாக அறிவித்துள்ளார்.இந்த தொகையை கொண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார். விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். சிந்தாமணி கூட்டுறவு சங்கத் தலைவர் சகாதேவ பாண்டியன் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.