ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், நடைபெற்ற செய்தியாளர் பயணத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு,ஆய்வு செய்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரபுரம் மற்றும் கரும்பாட்டூர் ஊராட்சி பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், நடைபெற்ற செய்தியாளர் பயணத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் 15.08.2019-ல் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளில், அதாவது 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்க மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டதற்கேற்ப, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டுக்குள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பிற்கும் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மொத்தம் 2,17,763 வீட்டுக் குடிநிர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். இதில் 79,464 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் ஏற்கனவே உரியவாறு வைப்புத் தொகையினை பெற்று வழங்கப்பட்டுள்ளது. 1,993 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு வரன்முறைபடுத்தப்பட்டுள்ளது. மீதி 1,36,306 வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும். 2019-20 மற்றும் 2020-21 ஆம் நிதியாண்டிற்கு சேர்த்து 63,680 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்க மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டது. 6,601 வீட்டுக் குடிநீர்; இணைப்புகள் கூடுதலாக வழங்க வேண்டும் என மாநில அளவில் இத்திட்ட செயலாக்க அலகின் மூலம் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க, பிற திட்டங்களில் ஒருங்கிணைத்து 6,601 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 70,281 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குலசேகரபுரம் ஊராட்சியிலுள்ள 353 குடியிருப்புகளில் 253 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்க விருப்பமனு பெறப்பட்டு, 90 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரும்பாட்டூர் ஊராட்சிகளிலுள்ள 421 குடியிருப்புகளில் 226 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்க விருப்பமனு பெறப்பட்டு, 89 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு வைப்புத்தொகையாக ரூ.2750ஃ- பெறப்பட்டு வருகிறது. இத்தொகையை ஒரே தவணையில் செலுத்த இயலாதவர்களிடம், அதனை தவணை முறையாக பெற்று குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்மாத இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
செய்தியாளர் பயணத்தின்போது, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி)திருமதி.ஏழிசைச் செல்வி, ஊராட்சி தலைவர்கள் திரு.சுடலையாண்டி (குலசேகரபுரம்), திருமதி.பா.தங்கமலர் (கரும்பாட்டுர்), அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திரு.நீல பாலகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் உதவி பொறியாளர்கள் பொறி.கீதா, பொறி.கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
—————————————————————————————————————————————வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்.