கோவை பள்ளி மாணவர் செய்த சாதனை
![]()
கோவையில் 349 மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள்! வெற்றி பெற்ற மாணவருக்கு ஹெலிகாப்டர் பயணம் – பார்க் யங் இனோவேட்டர் சம்மிட் 2026 அசத்தல்!
பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளுக்கும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், வெற்றி பெற்ற மாணவருக்கு பெற்றோர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் அரிய வாய்ப்பை வழங்கி அசத்தியுள்ளது கோவையில் உள்ள பார்க் கல்விக் குழுமம்! இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் 349 புதுமையான கண்டுபிடிப்புகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற ‘பார்க் யங் இனோவேட்டர் சம்மிட் – 2026’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது.
இதில், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
நாடு முழுவதும் இருந்து 102 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, மொத்தம் 349 புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினர்செயற்கை நுண்ணறிவு, சைபர் தொழில்நுட்பம், மருத்துவம், விமானவியல், விண்வெளி, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் தங்களது அறிவியல் திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, சிறந்த கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்திய கோவை ஜி.ஆர்.டி. சி.டி.எஃப். பள்ளி மாணவருக்கு, தனது பெற்றோர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியருடன் ஒருநாள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், ஹெலிகாப்டர் பயணத்தின்போது தனது கண்டுபிடிப்பு குறித்து பார்க் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவியுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் அந்த மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதனிடையே, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் புதுமையான யோசனைகளைப் பயனுள்ள தயாரிப்புகளாக மாற்றும் நோக்கில், பார்க் கல்விக் குழும வளாகத்தில் ‘விங்ஸ் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில்’ என்ற புதிய அமைப்பும் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, டான்சிம் தலைவர் சிங்கை ஜி. ராமச்சந்திரன், பார்க் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

