கோவையில் திருமண ஆசை காட்டி பெண் பாலியல் பலாத்காரம்

Loading

திருமண ஆசை காட்டி, பெண் இன்ஜினீயர் பாலியல் பலாத்காரம்
 கோவையை சேர்ந்த ஜோதிடர் மீது மேலும் ஒரு புகார்
சென்னை அருகே உள்ள மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண்.
இவர் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் பெற்றோரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் குடும்பப் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், தனது தோழியின் அறிவுறுத்தலின் பேரில் யூடியூப் மூலமாக ஜோதிட பலன்களைப் பார்க்கத் தொடங்கினார்.
அப்போது, கோவை பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதி காலனியைச் சேர்ந்த ஜோசியர் கார்த்திகேயன் என்பவரின் அறிமுகம் வாட்ஸ்-அப் மூலமாக கிடைத்துள்ளது.
ஜோசியர் கார்த்திகேயன், பெண்ணின் தந்தையின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி, சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில் மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்களில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று நம்ப வைத்துள்ளார். மேலும், 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்பெண்ணின் வீட்டிலேயே சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, திருமண தோஷப் பரிகாரம் செய்வதற்காக அப்பெண்ணை மட்டும் தனியாக புதுச்சேரிக்கு அழைத்துள்ளார். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்க வைத்த கார்த்திகேயன், அப்பெண்ணிடம் தனது காதலைத் தெரிவித்துத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சை மறுத்து அப்பெண் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.
அதன் பின்னரும், குடும்பத்தில் அமைதி திரும்பியதைச் சுட்டிக்காட்டி அப்பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்த கார்த்திகேயன், கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் தனியார் விடுதி, சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள விடுதி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஆகிய இடங்களுக்கு அப்பெண்ணை வரவழைத்துள்ளார்.
கட்டாயப்படுத்தி, “உன்னைத்தான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன், ஏமாற்ற மாட்டேன்” என்று வாக்குறுதி அளித்து, அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகத் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
சில மாதங்களாக கார்த்திகேயன் அப்பெண்ணின் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கினார். இதனால் சந்தேகமடைந்த அப்பெண் சமூக வலைதளங்களில் ஆராய்ந்தபோது, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் இதேபோல “திருமண பரிகாரம்” என்று கூறி கார்த்திகேயன் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், கார்த்திகேயனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதும் அம்பலமானது.
இது குறித்து கார்த்திகேயனிடம் தட்டிக் கேட்டபோது, “எனக்கு அரசியல்வாதிகள், முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை அனைவரையும் தெரியும். என்னைப் பற்றி யார் கிட்ட வேணா புகார் குடுத்துக்கோ” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜோதிட நம்பிக்கையைப் பயன்படுத்தித் தனது வாழ்க்கையைச் சீரழித்த ஜோசியர் கார்த்திகேயன் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் சென்னை மேற்கு தாம்பரம் இணை ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளார்.
0Shares