கோவையில் மழலை குழந்தைகள் செய்த சாதனை
![]()
கோவையில் ஒரே மணி நேரத்தில் 195 உலக நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் கண்டு, 50 மழலை மாணவ-மாணவிகள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சோமனூரில் செயல்பட்டு வரும் வாசுகி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில், நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘யங் மைண்ட்ஸ் ஃபிளாக் மாஸ்டரி வேர்ல்ட் ரெக்கார்ட்’ என்ற தலைப்பில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 50 மாணவ-மாணவிகளுக்கு உலக நாடுகளின் 195 தேசியக் கொடிகள் காட்டப்பட்டன. கொடிகளை பார்த்தவுடன், அவை எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை மாணவர்கள் துல்லியமாகவும் உடனடியாகவும் கூறி அசத்தினர்.
மேலும், கொடிகளின் வரிசையை மாற்றிக் கேட்டபோதும், மாணவர்கள் சிறப்பாக அடையாளம் கண்டு தங்களது நினைவாற்றலையும் அறிவுத்திறனையும் வெளிப்படுத்தினர்.
பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மாணவர்களின் திறமையை வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் அமைப்பின் பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்து, இந்த சாதனையை அதிகாரப்பூர்வ உலக சாதனையாக பதிவு செய்தனர். தொடர்ந்து, சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பள்ளித் தாளாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பள்ளி முதல்வர் யசோதா, அருணா பிரமிதா, யோகா ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.
மாணவர்களின் அறிவுத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக பள்ளி முதல்வர் யசோதா தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் மூலம், சிறு வயதிலேயே உலக நாடுகள் மற்றும் அவற்றின் கொடிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
ஒரே மணி நேரத்தில் 195 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டு மழலை மாணவர்கள் படைத்த இந்த உலக சாதனை, கோவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

