ஈரோடு காவல் ஆய்வாளர் மீது எஸ்.பி.யிடம் புகார்

Loading

ஈரோடு வணிகர் சங்க மாவட்ட பொருளாளரை அலைக்கழித்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் புகார்
ஈரோடு கொங்காளம்மன் கோவில் வீதியில் ‘உதயம் ஸ்டோர்’, ‘கீர்த்தனா ஸ்டோர்’ மற்றும் ‘உதயம் பிளவர் மில்’ ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொருளாளர் P. செல்வம் என்பவரை, சீருடை அணியாத நான்கு காவலர்கள் வங்கி பரிவர்த்தனையில் தவறு நடந்துள்ளதாகக் கூறி காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். அதற்கான ஆவணங்களையோ சம்மனையோ கேட்ட செல்வத்திடம், ஈரோடு நகர காவல் ஆய்வாளர் இளங்கோ மற்றும் உதவி ஆய்வாளர்கள் மிரட்டும் தொனியில் பேசி, அவரது சொந்த காரில் வர அனுமதிக்காமல் வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், மதியம் 12.15 மணிக்கு அவரை ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த வணிகர் சங்க நிர்வாகிகள், சர்க்கரை நோயாளியான செல்வத்திற்கு நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும் என்பதால் விசாரணையை உடனே முடிக்குமாறு ஆய்வாளர் சரவணனிடம் வலியுறுத்தினர். ஆனால், எந்தவித விசாரணையும் செய்யாமல் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவரை அலைக்கழித்து அமர வைத்திருந்த காவலர்கள், இறுதியில் ‘எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகிறேன்’ என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
சமூக சீர்கேடான குற்றவாளி போல தங்களை நடத்திய நகர காவல் ஆய்வாளர் இளங்கோ மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே. சண்முகவேல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் திரண்டு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். இப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து ஆய்வாளருக்கு எதிராகக் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் வணிகர்கள் எச்சரித்துள்ளனர்.
0Shares