கோவையில் அமைச்சரை சந்தித்த மாணவன்
![]()
கூகுள் ஏ ஐ உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில்
கோவை மாணவர் ரூ.24 லட்சம் முதல் பரிசை வென்று சாதனை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் அழைத்து பாராட்டு
அமெரிக்காவில் உள்ள கூகுள் டீப்மைண்ட் – கேகிள் உலகளாவிய போட்டியில் முதலிடம் பெற்று 24 லட்சம் பரிசு வென்ற கோவையைச் சேர்ந்த ஏ ஐ ஆராய்ச்சியாளர் சென்னை ஐ ஐ டி மாணவர் அர்ஜுன் திலக்கை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், மாண்புமிகு முதலமைச்சரை சந்திப்பதற்கான நேரம் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட, சென்னையில் இயங்கி வரும் ஈராஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சியாளரும், ஐஐடி சென்னை மாணவருமான அர்ஜுன் திலக் மற்றும் ஈராஸ் இன்னோவேஷன் ஏஐ ஆராய்ச்சியாளர் ராம்குமார் ஆகியோர் உருவாக்கிய கேஜ் என்ற செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மதிப்பீட்டு கருவி, கூகுள் டீப் மைண்ட் ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காகுள் இணைந்து நடத்திய உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி ஹேக்கத்தானில், உலகம் முழுவதும் வழங்கப்பட்ட நான்கு கிராண்ட் பிரைஸ் விருதுகளில் ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்காக அவர்களுக்கு அமெரிக்க டாலர் 25,000 (சுமார் ரூ.24 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஏஜிஐ-ஐ நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுதல் : அறிவாற்றல் திறன்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஹேக்கத்தானை உலகின் மிகப்பெரிய ஏஐ ஆராய்ச்சி நிறுவனமான கூகுல் டீப் மைண்ட், மற்றும் போட்டித் தளமான காகிள் மூலம் நடத்தியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகளைச் சேர்ந்த 7,654 போட்டியாளர்கள் மற்றும் 1,063 அணிகளும் பங்கேற்றன. மொத்தம் 2 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.9 கோடி) பரிசுத் தொகைக்காக போட்டியிட்டனர். இதனை 20 நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
மாணவர் அர்ஜின் திலக்கின் கண்டுபிடிப்பான கேஜ் என்ற இந்த மதிப்பீட்டு முறை, ஒரு ஏஐ மாடலுக்கு “தனக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ளும் திறன் உள்ளதா? அதற்கேற்ப மனித உதவியை நாடுகிறதா?” என்பதை சோதிக்கிறது.
270 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேள்விகள் மூலம், ஏஐ மாடல்கள் கேள்வியின் கடினத்தன்மையை கணித்து, பதிலளிப்பதில் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி, பதிலை அளிக்க வேண்டுமா அல்லது மனித மேற்பார்வைக்கு ஒப்படைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் வகையில் இந்த மதிப்பீடு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் ஜெமினிஏஐ, ஏந்த்ரோபிக் கிளவுட், அலிபாபா க்யூவென், டீப் சீக் உள்ளிட்ட உலகின் முன்னணி 8 ஏஐ மாடல்கள் மதிப்பிடப்பட்டன.
இந்த ஆய்வின் மூலம், அதிக மதிப்பெண் பெற்ற ஏ ஐ மாடல் அவசியமாக அதிக சுய விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. சில ஏஐ மாடல்கள் தாங்கள் தவறக்கூடிய கேள்விகளில் மனித உதவியை நாடிய நிலையில், மிகவும் துல்லியமானதாக இருந்த ஒரு மாடல் தவறாக இருந்தபோதும் ஒருமுறையும் விலகவில்லை. அரசு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், “எனக்கு உறுதியாகத் தெரியவில்லை; மனிதர் சரிபார்க்க வேண்டும்” என்று கூறும் திறன் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவரின் சாதனைகளைக் கேள்விப்பட்டு கோவை மாவட்ட பொறுப்பாளரும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சருமான வி சம்பத் குமார் மாணவர் அர்ஜுன் திலக்கை நேரில் அழைத்து பாராட்டி கண்டுபிடிப்பு குறித்து கேட்டறிந்தார். அர்ஜுனின் திறமையைப் போற்றி, அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்ததோடு, “இன்னும் பல சாதனைகளைப் படைத்து, நம் மண்ணிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என்று வாழ்த்தி ஊக்கமளித்தார். மேலும், மாண்புமிகு முதலமைச்சரை சந்திப்பதற்கான நேரம் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

