பழனி கோயில் நில விவகாரம் இனி யாரும் தப்பிக்க முடியாது
![]()
பழனி கோயில் நில விவகாரம்: சட்டம் வென்றது – இனி யாராக இருந்தாலும்தப்பிக்க முடியாது
கோயில் சொத்துகளை காக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை FAIRA வரவேற்கிறது; முறைகேடுகளில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பாக வெளிச்சத்திற்கு வந்துள்ள விவகாரம், தமிழகத்தின் கோயில் நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகளை பாதுகாப்பதில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிர்வாக மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சட்டம் தாமதிக்கலாம்; ஆனால் தோற்காது. அரசு நிலமோ, கோயில் நிலமோ, பொதுச் சொத்தோ யாருடைய தனிச்சொத்தும் அல்ல. மக்களின் சொத்துகளை பாதுகாப்பது அரசின் அரசியலமைப்பு கடமை. அதனை உறுதிப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் FAIRA மனப்பூர்வமாக வரவேற்கிறது.”
அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவை அல்ல என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். யார் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் அரசின் அறிவிப்புகளே இறுதியான ஆதாரமாக கருதப்பட வேண்டும்.
FAIRA வலியுறுத்தும் முக்கிய கோரிக்கைகள்:
கோயில் நிலங்கள் தொடர்பான அனைத்து பதிவுகளும் மாநிலம் முழுவதும் சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
போலி ஆவணங்கள், சட்டவிரோத பதிவு, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் அரசியல்வாதி, அதிகாரி, இடைத்தரகர், தனிநபர் என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணைந்து மாநில அளவிலான “கோயில் நில பாதுகாப்பு சிறப்பு கண்காணிப்பு அமைப்பு” உருவாக்க வேண்டும்.
கோயில் நிலங்களைப் பதிவு செய்வதற்கு முன், HR&CE மற்றும் வருவாய்த் துறையிடமிருந்து கட்டாய மின்னணு (Digital) சரிபார்ப்பு நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறாத வகையில் பதிவு முறையில் தொழில்நுட்ப பாதுகாப்பு (AI, GIS, Digital Verification) கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மக்களுக்கு FAIRA-வின் வேண்டுகோள்:
கோயில் சொத்துகளை பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் ஆகும். சந்தேகத்திற்கிடமான நிலப் பரிவர்த்தனைகள் குறித்து மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு FAIRA-வின் வேண்டுகோள்:
பழனி கோயில் நில விவகாரத்தை ஒரு தனிப்பட்ட சம்பவமாக மட்டுமே பார்க்காமல், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகளை பாதுகாக்கும் மாநில அளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
“நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் – அரசின் உறுதியான நடவடிக்கை – அதிகாரிகளின் பொறுப்புணர்வு – மக்களின் விழிப்புணர்வு” ஆகிய நான்கும் ஒன்றிணைந்தால் மட்டுமே பொதுச் சொத்துகளையும், கோயில் சொத்துகளையும் தலைமுறைகளுக்கு பாதுகாக்க முடியும்.சட்டத்தின் ஆட்சி நிலைக்க வேண்டும்.பொதுச் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்.
குறிப்பு
இவ்வறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளையும் அதிகாரப்பூர்வ தகவல்களையும் மதித்து வெளியிடப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் உறுதி செய்யப்படாத தகவல்களை இறுதியான உண்மையாகக் கருதாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

