TNRERA புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து
![]()
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) சார்பில் அதன் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி இதயம் கனிந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தங்களின் தலைமையின் கீழ் வெளிப்படையான, ஊழலற்ற, விரைவான, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட முன்னோடி ஒழுங்குமுறை அமைப்பாக உயர வேண்டும் என்பது ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்பாகும்.”
அதனை முன்னிட்டு FAIRA சார்பில் TNRERA-வுக்கு பின்வரும் முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன:
ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் காலந்தோறும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
அனைத்து விண்ணப்பங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிவு செய்யப்பட வேண்டும்.
First In – First Out (FIFO) நடைமுறை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.
இடைத்தரகர் ஆதிக்கம், லஞ்சம் மற்றும் கையூட்டு இல்லாத முழுமையான வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும்.
சிறிய குறைகளுக்காக கோப்புகளை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பும் நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும்.
TNRERA இணையதளம் மற்றும் ஆன்லைன் சேவைகள் மேலும் நவீனப்படுத்தப்பட வேண்டும்.
கூடுதல் சேவைக் கட்டணத்துடன் “Tatkal Service” அறிமுகப்படுத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பதிவு மற்றும் அனுமதி வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
மனைப்பிரிவு திட்டங்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்ட பின்னர் விதிக்கப்படும் தண்டத் தொகை நடைமுறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
தண்டத் தொகைகள் மற்றும் கட்டணங்கள் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு ஊக்கத்திற்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
வீடு வாங்குவோர், முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்முனைவோரின் நம்பிக்கையை வலுப்படுத்தும் மக்கள் நல நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், “FAIRA என்பது அரசுக்கும் TNRERA-வுக்கும் எதிரான அமைப்பு அல்ல; மாறாக, அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணைந்து வெளிப்படையான நிர்வாகம், முதலீட்டாளர் பாதுகாப்பு, மக்கள் நலன் மற்றும் ஆரோக்கியமான ரியல் எஸ்டேட் சூழலை உருவாக்க தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் பொறுப்புமிக்க தேசிய அமைப்பாகும்” என்று டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.

