10சென்ட்க்கு குறைவான ஆவணங்களை விடுவிக்கமறுப்பு

Loading

10சென்ட்க்கு குறைவான ஆவணங்களை விடுவிக்கமறுப்பு

தமிழ்நாடு பதிவுத்துறையின் Online Registration 3.0 மென்பொருளில் நிலவும் தொழில்நுட்ப நடைமுறைகள் காரணமாக, பெரிய நிலப்பரப்புடன் இணைந்து இடம்பெறும் 10 சென்டிற்குக் குறைவான புலப்பகுதிகள் உள்ள ஆவணங்கள் தானாகவே “Pending Document” நிலைக்கு மாற்றப்படுவதால், பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருவதாக Federation of All India Real Estate Association (FAIRA) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு FAIRA நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி விரிவான மனுவை சமர்ப்பித்துள்ளார்.

அந்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கலவை கிராமத்தில் அமைந்துள்ள 43.23 ஏக்கர் வேளாண் நிலம் பதிவு செய்யும்போது, சில புல எண்களில் 10 சென்டிற்குக் குறைவான நிலப்பரப்பு இடம்பெற்றிருந்த காரணத்தால், முழு ஆவணமும் “Pending Document” நிலைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலத்திற்கு தொடர்புடைய பட்டா, அடங்கல், வருவாய்த் துறை பதிவுகள், முந்தைய பதிவு ஆவணங்கள், GPS Location, Latitude, Longitude, Google Map உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களும், மேலும் பதிவு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வரைவு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், கள ஆய்வு மேற்கொண்ட பிறகே ஆவணத்தை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டதாக FAIRA கூறியுள்ளது.

இதன் காரணமாக முதலீட்டாளர்கள், வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர் நாள் முழுவதும் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி, மனஉளைச்சல், நேர விரயம் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாகவும், பொதுமக்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் நீண்ட தாமதங்கள் காரணமாக, நிர்வாகத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் FAIRA கவலை தெரிவித்துள்ளது.

இதற்குத் தீர்வாக, பதிவுத்துறையில் Artificial Intelligence (AI), GIS Mapping, Satellite Imagery, GPS Verification, Revenue Database Integration போன்ற நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, தேவையற்ற கள ஆய்வுகளைத் தவிர்த்து, டிஜிட்டல் சரிபார்ப்பு முறையை வலுப்படுத்த வேண்டும் என்று FAIRA வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், “Same Day Registration – Same Day Document Release” என்ற மக்கள் நட்பு சேவையை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தவும், பெரிய நிலப்பரப்பில் இணைந்து இடம்பெறும் சிறிய புலப்பகுதிகளுக்காக முழு ஆவணத்தையும் “Pending Document” நிலைக்கு அனுப்பும் நடைமுறையை உடனடியாக திருத்தவும், அனைத்து சார்பதிவாளர்களுக்கும் ஒரே மாதிரியான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நோக்கம் எந்த ஒரு தனிப்பட்ட அலுவலரையும் குறை கூறுவது அல்ல என்றும், தற்போதைய மென்பொருள் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சேவையை வழங்குவதற்கான நிரந்தர தீர்வை உருவாக்க வேண்டும் என்பதே FAIRA-வின் நோக்கம் என்றும் டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மற்றும் பதிவுத்துறை இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, மென்பொருள் மேம்பாடு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் மைய சேவை நடைமுறைகளை விரைந்து செயல்படுத்தும் என FAIRA நம்பிக்கை தெரிவித்துள்ளது

 

0Shares