மக்களின் இல்லக் கனவை சிதைக்கக் கூடாது-ஹென்றி
![]()
கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்; ஆனால் மக்களின் இல்லக் கனவை சிதைக்கக் கூடாது
கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தி, மண் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவசர வேண்டுகோள்.
தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு, மலைமண் பற்றாக்குறை மற்றும் கட்டுக்கடங்காத விலை உயர்வு காரணமாக இலட்சக்கணக்கான பொதுமக்களின் இல்லக் கனவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடி தலையீடு செய்து தீர்வு காணுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள சுரண்டல்களை தடுக்கவும், அரசின் வருவாயை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை காக்கவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றும், அனுமதியின்றி இயங்கும் கல்குவாரிகள் மற்றும் மண் குவாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் நியாயமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சட்டவிரோதங்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் சட்டப்படி வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமானத் துறையினர் மற்றும் முதலீட்டாளர்களை பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு வீடு என்பது செங்கல், சிமெண்டு, இரும்பால் மட்டும் உருவாகும் கட்டிடம் அல்ல; அது ஒரு குடும்பத்தின் வாழ்நாள் கனவு! ஒரு சாதாரண குடும்பம் தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த பணத்தையும், வங்கிக் கடனையும், நகைகளை அடகு வைத்துப் பெற்ற தொகையையும் கொண்டு சொந்த வீடு கட்ட முயற்சிக்கிறது. ஒரு வீட்டின் பின்னால் ஒரு குடும்பத்தின் எதிர்காலம், பாதுகாப்பு, சமூக மரியாதை மற்றும் தலைமுறைகளின் நம்பிக்கை அடங்கியிருக்கிறது.
அப்படிப்பட்ட சூழலில், தற்போது மலைமண், சவுடு மண் உள்ளிட்ட அடித்தள நிரப்புப் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீட்டு கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பலர் அடித்தளப் பணிகளை முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். சிலர் வங்கிக் கடனுக்கான மாத தவணையை செலுத்திக் கொண்டே, கட்டுமானம் முடியாத வீட்டை பார்த்து வேதனைப்படுகின்றனர். சிலர் வாடகை வீட்டிலும், கட்டி முடியாத சொந்த வீட்டிற்கான கடனிலும் சிக்கி இரட்டைச் சுமையை சுமந்து வருகின்றனர்.
கட்டுமானத் துறை இன்று மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. தமிழக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத் துறை இன்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
கட்டுமான நிறுவனங்கள்,வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டி செலுத்த வேண்டும்; முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்; வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்தப்படி வீடுகளை ஒப்படைக்க வேண்டும்;தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் திட்டங்களை முடிக்க வேண்டும்.
ஆனால் கட்டுமானப் பொருட்கள் கிடைக்காத நிலையும், மலைமண் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதும் காரணமாக, திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக கட்டுமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தொழிலாளர்கள், பொறியாளர்கள், மேஸ்திரிகள், வாகன உரிமையாளர்கள், கட்டுமானப் பொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு – மக்களின் கனவுகளுக்கு மரண அடி கடந்த சில மாதங்களாக மலைமண், ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால், வீடு கட்டும் செலவு பல லட்சம் ரூபாய்கள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தொடங்கிய கட்டுமானங்கள் முடங்கியுள்ளன. புதிய கட்டுமானத் திட்டங்கள் தள்ளிப்போடப்படுகின்றன. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வீடு கட்டும் திட்டங்கள் கைவிடப்படுகின்றன.
இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; தமிழர்களின் இல்லக் கனவை நேரடியாக பாதிக்கும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
சட்டவிரோத குவாரிகளை மூடும் நடவடிக்கையை தொடர வேண்டும். அனுமதி பெற்றும் விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய கல்குவாரிகள் மற்றும் மண் குவாரிகளுக்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கண்காணிக்கும் மாநில அளவிலான சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். செயற்கை தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தை தடுக்க கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுமானப் பொருட்களுக்கு நியாயமான மற்றும் நிலையான விலை நிர்ணய முறைமையை அரசு உருவாக்க வேண்டும்.
“மக்களின் இல்லக் கனவை பாதுகாப்பது அரசின் உயரிய பொறுப்பு” இது தொடர்பாக டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் கூறுகையில்:
“சட்டவிரோதங்களை ஒழிப்பது அவசியம். இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அரசின் கடமை. ஆனால் அதே நேரத்தில் வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமானத் துறையினர் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் சமநிலையான நிர்வாகம் தேவை. ஒரு வீட்டைக் கட்டுவது வெறும் கட்டுமானம் அல்ல; அது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் வாழ்க்கைப் பயணம். அந்தப் பயணம் அரசின் நடவடிக்கைகளால் தடைபடக் கூடாது. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி, மண் மற்றும் பிற பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொதுமக்களின் இல்லக் கனவை பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கையை அரசு மிகுந்த முக்கியத்துவத்துடன் பரிசீலித்து உடனடி தீர்வு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
]”கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்; ஆனால் மக்களின் இல்லக் கனவை சிதைக்கக் கூடாது. சட்டத்தின் ஆட்சியும், மக்களின் நலனும் ஒன்றாக பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதே அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என டாக்டர் ஆ.ஹென்றி தெரிவித்துள்ளார்.

