வாக்குஎண்ணிக்கை மையங்களில் அனைத்தும் தயார்
![]()
வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஏப் 27 : இந்திய தேர்தல் ஆணையத்தினால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 க்கான கால அட்டவணை கடந்த 15.03.2026 அன்று வெளியிடப்பட்டதன் பேரில், திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, .திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி,மதுரவாயல்,அம்பத்தூர், மாதவரம் மற்றும் .திருவொற்றியூர் ஆகிய பத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 4016 வாக்குச்சாவடிகளில் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேற்படி வாக்குப்பதிவு முடிவுற்ற பின்னர் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,திருத்தணி மற்றும் .திருவள்ளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் வட்டம், செவ்வாப்பேட்டை அரசு தொழில்நுட்ப கல்லூரி,பூந்தமல்லி, ஆவடி மற்றும் மதுரவாயல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் வட்டம், பெருமாள்பட்டு கிராமம், ஸ்ரீராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர்,மாதவரம் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் வட்டம், பெருமாள்பட்டு கிராமம், ஸ்ரீராம் பாலிடெக்னிக்கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொது பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரின் முன்னிலையில் சீலிடப்பட்டது.
மேற்படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் அடுக்கு(Inner Periphery) 40 மத்திய காவல் படையினரால் பாதுகாக்கப்படுகிறது. இரண்டாவது அடுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஒருசார் ஆய்வாளர் மற்றும் 40 ஆயுதம் ஏந்திய காவலர்களால் பாதுகாக்கப்படுகிறது. மூன்றாவது அடுக்கு (Outer Periphery) 3 உதவி ஆணையர், 9 ஆய்வாளர், 18 சார் ஆய்வாளர், 40 ஆயுதம் ஏந்திய காவலர்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவையன்றி ஒவ்வொரு வளாகத்திலும் வயர்லெஸ் கண்காணிப்பு அறை மற்றும் நாசவேலை தடுப்பு குழுவால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மேற்படி பாதுகாப்புபணிகளை மேற்பார்வையிட 24 மணிநேரமும் வட்டாட்சியர் நிலையில் 18 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆவடி காவல் ஆணையர் ஆகியோர்களால் பாதுகாப்பு நிலை குறித்து, திடீர் தணிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும், மேற்படி பாதுகாப்பு அறைகள் உள்ள பள்ளி (ம) கல்லூரி வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் 387சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது, மேலும், பாதுகாப்பு அறையின் வெளியே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வேட்பாளர்களின் முகவர்கள் அப்பள்ளி (ம) கல்லூரி வளாகத்தில் பிரிதொரு இடத்தில் தொலைக்காட்சி வைக்கப்பட்டு 24 மணிநேரமும் வேட்பாளர்களின் முகவர்களால் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ள ஆவண செய்யப்பட்டுள்ளது. இப்பாதுகாப்பு அறை வைக்கப்பட்டுள்ள பள்ளி (ம) கல்லூரி வளாகத்தின் மேலே எவ்வித ட்ரோன் மற்றும் பறக்கும் சாதனங்கள் பறக்க No fly Zone உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நாளான 04.05.2026 வரை முழுமையான பாதுகாப்புடன் கண்காணிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

