வேளாண்மை துறையின்தடையின்மை சான்றுபெறுவதில்பிரச்சனை?
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு முழுவதும் மனை பிரிவு மற்றும தொழில் நிறுவனங்களுக்கு வேளாண்மை துறையின் மாவட்ட இணை இயக்குனரிடமிருந்து தடையின்மை சான்று பெறுவதில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் தீர்வு காண உதவிட வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..
தமிழகம் முழுதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் முழுமை திட்டத்தின் (Master Plan) கீழ் உள்ள நிலங்களில் முழுமை திட்ட பகுதிகளை (PLANNING AREA) தவிர்த்து மீதமுள்ள பிற திட்டமில்லாத பகுதிகளில் (NON PLANNING AREA) நன்செய் நிலங்கள் மற்றும் புன்செய் நிலங்கள் மனைப்பிரிவு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் இடங்களில் சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் வேளாண்மை துறையின் (Agriculture Department) மாவட்ட இணை இயக்குனர் அவர்களிடம் நில பயன்பாடு, கட்டிடம் கட்டுதல் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கான வழிகாட்டுதல் TNCDBR 2019 `விதிகள் மற்றும் அரசாணைகளின் படியும் தடையின்மை சான்று பெற வேண்டுமென விதியிருக்கின்றது.
மேற்கண்ட விதியின் கீழ் மாவட்ட வேளாண்மை துறையின் இணை இயக்குனர் அவர்கள் மிகுதியான பணிச்சுமையின் காரணமாக சம்பந்தப்பட்ட இடங்களை கள ஆய்வு செய்து அனுமதி வழங்குவதில் பெரும் காலதாமதம் ஆகின்றது. இதனால் பெருமளவில் தங்களது ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு முதலீடு செய்த மனை பிரிவு அபிவிருத்தியாளர்கள் மற்றும தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களின் நேரம் காலம் விரையமாவதுடன், பெருமளவில் பொருளாதார இழப்பையும் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழல் நிலவுகிறது.
ஆகவே உயர்திரு முதன்மை செயலாளர் அவர்கள் மேற்கண்டவைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு அனுமதி வழங்குவது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் இணை இயக்குனர் (Joint Director) / துணை இயக்குனர் (Deputy Director) அல்லது உதவி இயக்குநர் (Assistant Director) என அந்தந்த மாவட்டத்தில் பொறுப்பில் இருப்பவர்களே சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் கள ஆய்வு செய்து அந்த இடம் காலியாக இருக்கும் பட்சத்தில், கள ஆய்வு செய்த நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் அலுவலர்களே மனை பிரிவு அபிவிருத்தியாளர்கள் மற்றும தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களின் நேரம் காலம் விரையமாவதை தவிர்த்திடும் வகையில் ஒப்புதல் வழங்கிட உரிய அதிகாரத்தை வழங்கிடும் வகையிலும், இது சம்பந்தமாக மாவட்ட வேளாண் இணை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்கின்ற அதிகாரத்தை ரத்து செய்திடும் வகையிலும் தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டத் திருத்தத்தையும் அதிகார பகிர்வையும் வழங்கி உதவிட வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

