பதிவுச் சட்டம் 34C சுற்றறிக்கை வெளியிட வேண்டும்

Loading

பதிவுச் சட்டம் 34C குறித்து தெளிவான சுற்றறிக்கை வெளியிட வேண்டும் – பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு கடிதம் எழுதி, அசல் ஆவணங்கள் தொடர்பான பதிவு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 34C குறித்து பொதுமக்கள் நலன் கருதி தெளிவான சுற்றறிக்கையை விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், போலி ஆவண பதிவுகளைத் தடுக்கவும் பொதுமக்களின் சொத்து உரிமையை பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு சட்ட, நடைமுறைகளை அமல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, 2022ஆம் ஆண்டு பதிவு விதி 55(A) மூலம் சொத்து பதிவுகளுக்கு அசல் ஆவணம் கட்டாயமாக்கப்பட்டதாகவும், இதனால் அசல் ஆவணங்களை இழந்த பொதுமக்கள் சொத்துகளை வாங்கவோ விற்கவோ முடியாத சிக்கலில் சிக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள், பதிவுத்துறை சுற்றறிக்கைகள் மற்றும் FAIRA கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட பல கடிதங்கள் மூலம் தீர்வு கோரப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் போலி பதிவுகளை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு Registration (Tamil Nadu Amendment) Act, 2025 – Section 34C என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்ததாகவும், இச்சட்டம் 23.01.2026 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சட்டத்தின் படி கிரையம், ஒப்பந்தம், தானம், விடுதலை, பவர் ஆப் அட்டார்னி, அடமானம், உயில், பாகப்பிரிவினை போன்ற அசையா சொத்து பதிவுகளுக்கு மூலப்பத்திரம் கட்டாயம் என குறிப்பிடப்பட்டாலும், சில சூழ்நிலைகளில் சான்றளிக்கப்பட்ட நகல்கள் (Certified Copy), வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் NOC, காவல்துறை CSR மற்றும் Non-Traceable Certificate போன்ற ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்ய அனுமதி இருப்பதாகவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த சட்டம் தொடர்பாக சார் பதிவாளர்களுக்கு தெளிவான வழிகாட்டி இல்லாத காரணத்தால், அசல் ஆவணங்கள் இல்லாதபோது ஆவண பதிவுகளை செய்ய அவர்கள் தயக்கம் காட்டி மறுப்பதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அசல் ஆவணங்கள் கட்டாயம் என்ற நடைமுறை காரணமாக சில சமயங்களில் ஆவணங்கள் களவாடப்பட்டு பணம் பறிக்கும் சம்பவங்களும், குடும்பங்களுக்குள் சொத்து தொடர்பான மோதல்களும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, அசல் ஆவணங்கள் இல்லாத சூழ்நிலைகளில் எந்த ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யலாம் என்பதையும், சார் பதிவாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிவிலக்குகளையும் தெளிவாக விளக்கும் சுற்றறிக்கையை பதிவுத்துறை உடனடியாக வெளியிட வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என டாக்டர் ஆ.ஹென்றி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

0Shares