பதிவு செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு கோவை மக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..

தமிழ்நாடு பதிவுத்துறை கோவை மண்டலம், கோவை வடக்கு பதிவு மாவட்ட எல்லைக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் சார் – பதிவாளர் அலுவலகம், அப்பகுதியைச் சுற்றியுள்ள கோவை மாநகராட்சி  வடக்கு மண்டலத்திற்குட்பட்ட  துடியலூர், கூடலூர் நகராட்சி, இடிகரை, பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார்சாமக்குளம், நரசிம்மநாயக்கன் பாளையம், வீரபாண்டி, ஆகிய பேரூராட்சிகளையும் மற்றும் அக்ரஹாரசாமக்குளம், நாயக்கன்பாளையம், கீரநத்தம், குருடம்பாளையம், கொண்டையம்பாளையம், பிளிச்சி, வெள்ளமடை ஆகிய ஊராட்சிகளையும் உள்ளடக்கி பதிவு பணிகளை கையாளும் மிக முக்கியத்துவம் வாய்ந்த சார் – பதிவாளர் அலுவலகங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.

பெரியநாயக்கன்பாளையம் சார் – பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நாளொன்றுக்கு சுமார் 200 முன்பதிவு டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு பதிவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போதிய அளவில் ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது பத்திரங்களை பதிவு செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதுடன், அலுவலக ஊழியர்களும் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

வேகமாக வளர்ந்து வரும் கோவை மாவட்டத்தின் வளர்ச்சியையும் மற்றும் அம்மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகையினையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு கோவை மாவட்டத்தில் புதியதாக 8 முதல் 10 புதிய சார் பதிவாளர் அலுவலகங்களை அமைக்க போவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.   அதன் அடிப்படையில் மேற்கண்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் பதிவுத்துறையின் சேவைகளை எளிதில் விரைந்து கிடைக்கப் பெற்று பயன் பெரும் வகையிலும் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சார் – பதிவாளர் அலுவலர்களின் பணி சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கத்துடனும் பெரியநாயக்கன்பாளையம் சார் – பதிவாளர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து, சர்க்கார்சாமகுளத்தில்  புதிய சார் – பதிவாளர் அலுவலகம் அமைத்திட தீர்மானத்திருப்பதாகவும், மேலும் சர்க்கார்சாமகுளம் ஊராட்சியில் அமையவிருக்கும் புதிய        சார் – பதிவாளர் அலுவலகத்துடன் பெரியநாயக்கன்பாளையம் சார் – பதிவாளர் அலுவலக எல்லையில் உள்ள இடிகரை, அக்ரஹாரசாமகுளம், வெள்ளமடை, கொண்டையம்பாளையம், கீரநத்தம் ஆகிய ஊராட்சிகளை புதியதாக அமைக்கப்படவுள்ள சர்க்கார் சாமக்குளம் சார் பதிவாளர் அலுவலகத்துடன் சேர்க்கப்படுவதாகவும் தெரிவித்து, அதற்கான கருத்து கேட்பு கூட்டம்                மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்றதாகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. மேலும் சமீபகாலமாக அதற்கான பணிகள்‌  மேற்கொள்ளப் பட்டு வருவதாக  பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

மேற்குறிபிட்ட வகையில் சர்க்கார்சாமகுளத்தில் புதிய சார் – பதிவாளர் அலுவலகத்தை  அமைப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு ஒரு தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றாலும், பெரும்பான்மை மக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் மேற்கண்ட நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் வசிக்கும் பெரும்பான்மை மக்களின் விருப்பமாக பொது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளின் அடிப்படையில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூரில் புதிய சார் – பதிவாளர் அலுவலகம் அமைவதின் மூலம் அனைவருக்கும் மிகப் பயனுள்ளதாக அமையும் என பெரும்பாலான பொதுமக்கள் கருதுகின்றனர்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்ட கோவை மண்டலம், கோவை வடக்கு பதிவு மாவட்ட எல்லைக்குட்பட்ட பெரும்பான்மை நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் வசிக்கக்கூடிய  மக்களின் கோரிக்கையினை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டும், பதிவுத்துறையின் சேவைகளை விரைந்து எளிதில் பெற்று பயன்பெறும் வகையில்  பதிவுத்துறை சர்க்கார்சாமகுளம் பேரூராட்சியில் புதியதாக அமைத்திட தீர்மானித்துள்ள சார் – பதிவாளர் அலுவலகத்தை அமைப்பதை  தவிர்த்து, பொது போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கவனத்தில் கொண்டு துடியலூர் பகுதியில் புதிய    சார் – பதிவாளர் அலுவலகம் அமைத்திட தாங்கள் உரிய வழிவகையை விரைந்து செய்திட வேண்டுமென பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி  கடிதம் எழுதியுள்ளார்.

0Shares