ஈரோடுமாநகராட்சிபட்ஜெட்கூட்டம்அதிமுகவெளிநடப்பு
![]()
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஈரோடு மாநகராட்சிக் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சொத்து வரி உயர்வு, குடிநீர் திட்டப் பணிகள் தாமதம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் குறைகளை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் எம்.டி.தங்கமுத்து தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.டி.தங்கமுத்து, ஈரோடு மாநகராட்சியில் மற்ற மாநகராட்சிகளை விட சொத்து வரி மிக அதிகமாக உள்ளதாகவும், வரியைக் குறைக்க வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வரும் கால்நடைச் சந்தையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததால், அது தொடர்பான தீர்மானம் எண் 3-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். மேலும், குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும், சதுரடிக்கு ரூ. 50-லிருந்து ரூ. 88 ஆக வரி உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பராமரிப்பின்றி காணப்படும் அம்மா உணவகங்களைச் சீரமைக்க வேண்டும் எனவும், அங்கு வழங்கப்படும் உணவின் அளவையோ அல்லது பயனாளிகளின் எண்ணிக்கையையோ குறைக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இன்னும் குடிநீர் விநியோகம் முழுமையாகச் சென்றடையவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட நகரும் குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பது மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேட்டைக் காட்டுவதாகவும், நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள சிறு கடைகளில் முறையற்ற வகையில் அதிக வரி வசூலிக்கப்படுவதையும் கண்டிப்பதாகத் தெரிவித்தார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுன்சிலர்கள் ஏ.ஆர்.ஜெகதீசன், கே.சி.பி.நிர்மலாதேவி, தங்கவேல், பாரதி கிருஷ்ணமூர்த்தி, மேஹலதா ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

