அய்யாநல்லகண்ணுவின்மறைவிற்கு இரங்கல்-ஹென்றி

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள் அப்பழுக்கற்ற, தூய்மையான தலைவர் அய்யா நல்லகண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..

பொதுவாழ்வில் நேர்மை, எளிமை, மற்றும் தூய்மையை கடைபிடித்த அதிசயமான அபூர்வ தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் எல்லைகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்களால் மதிக்கப்படும் போராளி அய்யா நல்லக்கண்ணு அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் இன்று (25-02-2026) பிற்பகல் அவர் தனது 101வது வயதில் இயற்கை எய்தினார் என்கின்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

அய்யா நல்லக்கண்ணு அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கணிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மக்கள் நலனுக்கான போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்,நேர்மை, தியாகம், தன்னலமற்ற உழைப்பு, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரம் போன்றவற்றின் மறுபெயர்தான் நல்லகண்ணு. இதே 101 வருடங்களுக்கு முன்பு, இதே நாளில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொடங்கப்பட்டது. கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் அய்யா நல்லகண்ணுதான். பாறையை போல துணிச்சலுடன், எண்ணற்ற அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட அஞ்சாநெஞ்ச சிங்கம்தான் அய்யா நல்லகண்ணு.

அய்யா நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 வருடங்கள் செயலாற்றியவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அய்யா நல்லகண்ணு, 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவராக பணியாற்றி உள்ளார். பாட்டாளி வர்க்கத்தினர் மற்றும் மக்களுக்காகவே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு, வாழ்க்கை முழுவதும் தியாக வாழ்க்கை வாழ்ந்த மனித புனிதர்! நதிநீர் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழலை காப்பதற்காகவும், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் சமரசம் இன்றி தொடர்ந்து போராடிய நெஞ்சுரம் மிக்க தோழர். அய்யா நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கு பேரிழப்பாகும்.

அய்யா நல்லகண்ணு அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும், அனுதாபத்தையும் FAIRA கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம். அய்யாவின் ஆன்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0Shares