மாமனார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை
![]()
திருவள்ளூர் அருகே சொத்து தகராறில் மாமனார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் மருமகள் மற்றும் அவரது தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவு :
திருவள்ளூர் பிப் 22 : திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த நெமிலி பகுதியை சேர்ந்தவர் பழைய அலுமினியம் பாத்திரம் வியாபாரம் செய்பவர் சபாபதி -72 இவருடைய மாற்றுத்திறனாளி மகன் பிரபாகரனுக்கு தங்கை முறை உறவுள்ள கலைவாணி மகள் காயத்ரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் காயத்ரி கணவர் பிரபாகரனை பிரிந்து வாழ்ந்து வருவதால் தனது கணவர் சொத்தில் பாகம் கேட்டு மாமனார் சபாபதியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2019-இல் சொத்து தகராறு ஏற்பட்ட போது அதிகாலை கட்டிலில் படுத்திருந்த சபாபதி மீது அவரது மருமகள் காயத்ரி மற்றும் காயத்ரியின் தாயார் கலைவாணி ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.திருத்தணி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நீதிபதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சபாபதியிடம் மரண வாக்குமூலம் பெற்றதில் தன்னை மருமகள் அவருடைய தாயார் இணைந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரின் வாக்குமூலம் அடிப்படையில் காயத்ரி மற்றும் கலைவாணி ஆகியோர் கனகம்மாசத்திரம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தஸ்னீமா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாட்சியங்கள் நிருபனமானதால் மாமனாரை கொலை செய்த காயத்ரி -42 மற்றும் இந்த கொலை மகளுடன் இணைந்து செய்த காயத்ரியின் தாயார் கலைவாணி-64 இருவருக்கும் ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையெடுத்து இருவரையும் கனகம்மாசத்திரம் காவல் துறையினர் புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

