மகளிர் சுய உதவிக்குழு 34 பெண்களுக்குபயிற்சி
![]()
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக்குழு 34 பெண்களுக்கான பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் பிப் 22 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கடம்பத்தூர் ஊராட்சி கிராம ஊராட்சி சேவை மையத்தில் பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பு நிதியின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு 34 பெண்களுக்கான பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பனை ஓலை மூலப்பொருட்களை வழங்கி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் உரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் “பனைவிதை வங்கி” என்ற ஒரு சிறப்பு திட்டத்தை 2022 ம் ஆண்டிலிருந்து துவக்கி நடத்தி கொண்டிருக்கிறோம். அதன் மூலம் நீர் நிலைகளில் மற்றும் சாலை ஓரங்களிலும், அரசு பொது இடங்களிலும், பனை விதைகளை நடவு செய்யக்கூடிய பணிகளை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். கடம்பத்தூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி ஆகிய 6 ஒன்றியங்களில் அதிக அளவில் பனை மரங்கள் ஏற்கனவே உள்ளன.
தற்போது பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு முதல் பயிற்சி முகாம் இன்று கடம்பத்தூரில் துவக்கி இருக்கிறோம். இதன் நோக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அனைவரும் சுயமாக தொழில் செய்து தற்சார்பு பொருளாதார மேன்மை அடைய வேண்டும் என்பதும் படிப்படியாக நெகிழிக்கு மாற்றான ஒரு பொருளை சொந்தமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம்.
இங்கு பயிற்சி பெறக்கூடிய ஒவ்வொருவரும் உங்கள் பகுதியில் மேலும் 10 பேர் அல்லது 20 பேருக்கு இந்த இத்த பயிற்சியை அளித்து அதன் மூலம் நீங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு நீங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை நீங்களே விற்பனை செய்து வருவாய் காண வேண்டும் என்று கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ்,சௌந்தரி, மத்திய பனைப் பொருட்கள் (ம) பனை பொருள் பயிற்சி நிறுவன முதல்வர் பிரபாகர், மக்கள் நலப் பணி இயக்க அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

