மல்லர் கம்ப சாகசம் பாரம்பரிய விளையாட்டு
![]()
ஈரோடு மாநகராட்சி விளையாட்டு விழா: மல்லர் கம்ப சாகசங்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழிப்புணர்வு – யான் அறக்கட்டளைக்கு மனமார்ந்த நன்றி!

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான முதலாம் ஆண்டு விளையாட்டுப் போட்டி விழா வ.உ.சி பூங்கா மைதானத்தில் மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் ஐஏஎஸ்., தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மட்டைப்பந்து, கால்பந்து, கபடி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கேரம் மற்றும் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் எனப் பல்வேறு போட்டிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். போட்டிகளின் நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு முன்னதாக நடைபெற்ற மல்லர் கம்ப விளையாட்டு சாகசங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. சிறுவர் மற்றும் சிறுமிகள் தங்கள் உடலை ரப்பர் போல வளைத்து மல்லர் கம்பத்தில் செய்த சாகசங்கள் பார்வையாளர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றன.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) காஞ்சன் சவுத்ரி, மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார், திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் காட்டு சுப்பு என்கிற மு.சுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் ஆ.ஜெகதீசன், பழனியப்பா செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மல்லர் கம்ப வீரர்களின் திறமையைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியின் இடையே ஈரோடு மல்லர் கம்ப விளையாட்டு செயலாளர் கீதா பேசுகையில், பாரம்பரியமிக்க இந்த வீர விளையாட்டை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, இந்த விளையாட்டிற்குத் தேவையான மல்லர் கம்பம், தரை விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை வழங்கி, வீரர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி வரும் “யான் அறக்கட்டளைக்கு தனது மனமார்ந்த நன்றிகளை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்தார். யான் அறக்கட்டளையின் இத்தகைய தொடர் ஆதரவால்தான் பாரம்பரிய மல்லர் கம்ப விளையாட்டு தற்போது ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் ஊக்கத்தையும் பெற்று வருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

