பசு மாட்டை கொன்றவருக்கு நீதிமன்றம் ஜாமீன்மறுப்பு
![]()
பசு மாட்டை சுட்டுக் கொன்றவருக்கு திருவள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு :
திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (30). இவர் கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31 ம் தேதி இரவு சேலை பகுதியில் பசுமாடு ஒன்றை விலைக்கு வாங்கிய நிலையில் ஜனவரி 1 ம் தேதி அதிகாலை மாடு அவரிடமிருந்து தப்பியுள்ளது. இதனையடுத்து அவர் குருவிக்காரரை அழைத்து வந்து கொக்கு சுடும் துப்பாக்கி மூலம் மாட்டை பிடிக்க முயன்று சுட்டுள்ளார். அப்போது தவறுதலாக அப்பகுதியைச் சேர்ந்த சந்தனக்குமார் என்பவரின் பசு மாட்டின் மீது துப்பாக்கி குண்டு பட்டு படுகாயமடைந்தது.
இதனையடுத்து படுகாயமடைந்த பசு மாட்டை சென்றான்பாளையத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் 3 தினங்களில் பசு மாடு உயிரிழந்துவிட்டது. இது குறித்து விலங்குகள் நல அலுவலர் சாய் விக்னேஷ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்கு பதிவு செய்து கடந்த 12-ஆம் தேதி பசு மாட்டை சுட்டுக் கொன்றதாக சேலை பகுதியைச் சேர்ந்த பிரதாப் (30) என்பவரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று பிரதாப்பின் ஜாமீன் மனு திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து பிரதாப் மீண்டும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

