ரெட் டாக்ஸி கார்&உடமைகளை கொள்ளை 4பேர் கைது
![]()
ஈரோடு
ரெட் டாக்ஸி கார் &உடமைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது
ரெட் டாக்ஸி கார் மற்றும் உடமைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது: துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
ஈரோடு தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய கரூர் சாலையில், கடந்த 19.01.2026 அன்று இரவு வாடகைக்கு கார் ஓட்டும் அன்சர் அலி என்பவரை மர்ம நபர்கள் நால்வர் வாடகைக்கு வரவழைத்துள்ளனர். பழைய ரயில்வே குடியிருப்பு அருகே கார் வந்தபோது, அங்கு மறைந்திருந்த அந்த கும்பல் அன்சர் அலியைத் தாக்கி அவரிடமிருந்த டொயோட்டா கிளான்ஸா கார், ரொக்கப் பணம் 1000 ரூபாய், வெள்ளி பிரேஸ்லெட் மற்றும் செல்போன் ஆகியவற்றைத் திட்டமிட்டு கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்த தகவல் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொள்ளையடிக்கப்பட்ட காரின் எண் மற்றும் சந்தேக நபர்களின் அடையாளங்கள் மாவட்டம் முழுவதும் உள்ள இரவு ரோந்து போலீசாருக்கு உடனடியாக பகிரப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் வழியாக கோவை-சேலம் தடம் 3-ல் சந்தேகத்திற்கிடமான முறையில் கடக்க முயன்ற காரை மறித்த பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளர் சத்தியசிங் மற்றும் காவலர் செந்தில் ஆகியோர், காரில் இருந்த 4 எதிரிகளையும் துணிச்சலாகப் பிடித்து கைது செய்தனர். கொள்ளை நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளைப் பிடித்து கார் மற்றும் உடமைகளை மீட்ட இந்த துரிதமான நடவடிக்கையைப் பாராட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, உதவி ஆய்வாளர் சத்தியசிங் மற்றும் காவலர் செந்தில் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

