11ஆம் வகுப்பு பயிலும் 604 மாணவியருக்கு மிதிவண்டி

Loading

 

சென்னை

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், பெரம்பூர், சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 604 மாணவியருக்கு மிதிவண்டிகளையும், 10  மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பயிலும் 846 மாணவியர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி பயிர் வகைகளையும் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,  (19.01.2026) அன்றுமாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிச் சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 11ஆம் வகுப்பு பயிலும் 604 மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கான சிற்றுண்டி பயிர் வகையினை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு மேயர் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, படி படி என்று ஒவ்வொரு நிகழ்வுகளிலும் மாணவர்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, வடசென்னை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு சேர்த்து, ஓய்வின்றி மக்கள் நலனே தன் நலனாக பணியாற்றி வரும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் நல்ஆலோசனையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறையின் சார்பில் மாண்புமிகு மேயர் அவர்களின் அறிவிப்பின் வாயிலாக, மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, காலணிகள், 12ஆம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய, மாநில அளவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி, உணவுப்படி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு உபகரணப் பொருட்கள், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை அனைத்தையும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் .

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 35 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 46 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 81 பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில்  7,268 மாணாக்கர்களும் 12ஆம் வகுப்பில் 5,290 மாணாக்கர்களும் என மொத்தம் 12,558 மாணாக்கர்கள் பயில்கின்றனர். இம்மாணாக்கர்கள் மார்ச் 2026-ல்  அரசு பொதுத் தேர்வினை எதிர்கொள்ள ஏதுவாக திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் சோர்வடையாமல் இருந்திட மாலை நேரத்தில் சிற்றுண்டி வகைகள் கருப்பு கடலை, வெள்ளை கடலை, பச்சைப் பட்டாணி, வெள்ளை பட்டாணி, வேர்க்கடலை மற்றும் பச்சைப் பயிறு என இவற்றில் ஏதேனும் ஒன்று மாணாக்கர்களுக்கு சுவையாகவும் மற்றும் சத்துள்ளதாகவும்  வழங்கப்படுகிறது.

அவ்வாறாக, இப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும்  330  மாணவியர், 12ஆம் வகுப்பு பயிலும் 516 மாணவியர் என மொத்தம் 846 மாணவியருக்கு மாலை நேர சிற்றுண்டி பயிர் வகைகள் மாண்புமிகு இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. இவ்வாறாக, சென்னைப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் நல்ன் கருதியும் அவர்களின் தேவைகளை அறிந்தும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை மாணாக்கர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர்  திரு.தாயகம் கவி, இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் க. கற்பகம், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் திருமதி புனிதவதி எத்திராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.எம்.கபீர், உதவி கல்வி அலுவலர்கள் திரு.தணிகைவேலு, திரு.முனிராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு : இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்,

                                               பெருநகர சென்னை மாநகராட்சி.

0Shares