தேர்தலைபுறக்கணிக்கப்போவதாக மக்கள் எச்சரிக்கை
![]()
திருவள்ளூர் அருகே குடி நீர்,ரேஷன் கடை, சுடுகாடு இல்லாதது குறித்தும் கொடுத்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை :
திருவள்ளூர் டிச 30 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் பஞ்சாயத்து. வெங்கமாபுரம் கண்டிகை மணம்பேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட் ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பூண்டியிலிருந்து வரும் நீரை சேமித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வரும் குடிநீரானது மஞ்சள் கலரில், கோமியம் போல் வருவதாகவும், அதில் சின்ன சின்ன எறால், மீன்குஞ்சு, புழு, பாசி படர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் சுத்தம் செய்து அனுப்ப பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கவே பயமாக இருப்பதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே போல் மணம்பேடு கிராமத்தில் இருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள நம்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டியிருப்பதாகவும், 20-ஆம் தேதிக்கு பிறகு பொருட்கள் வழங்குவதாக சொல்வதால் சிரமமாக இருப்பதாகவும், போதிய பேருந்து வசதி இல்லாததால் பொருட்களை வாங்கி வருவதில் சிரமம் இருப்பதாகவும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே நேரத்தில் சுடுகாடு வசதி இல்லாததால் தற்போது உயிரிழப்பு ஏற்படும் போது அதை புதைப்பதற்காக பள்ளம் தோண்டும் போது ஏற்கனவே புதைத்த உடல்களின் எலும்புகள் தெரிவதால் அச்சமடைவதாகவும், ஏற்கனவே புதைத்த உடல் மீதே புதைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் மழை காலங்களில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஓட்டு கேட்க வருபவர்கள் அனைத்தையும் செய்வதாக சொல்லிவிட்டு செல்வதாகவும் ஜெயித்த பிறகு எட்டிக்கூட பார்ப்பதில்லை என்றும் இந்த தேர்தலுக்குள் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசின் ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாகவும் தேர்தலில் வாக்காளிக்காமல் புறக்கணிக்கப் போவதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

