47 பயனாளிகளுக்கு ரூ.5.59 கோடி மதிப்பு கடன் உதவி
![]()
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் 47 பயனாளிகளுக்கு ரூ.5.59 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளை வழங்கினார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (18.12.2025)அன்று மாவட்டத் தொழில் மையத்தின் சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் 47 பயனாளிகளுக்கு ரூ.5.59 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளை வழங்கி பேசியதாவது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டமானது பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பெண்களுக்கான ஒரு திட்டமாகும். தமிழ்நாடு அரசானது இத்திட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து மிகவும் சிறப்பாக செயல்படுத்திட திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் வரை திட்டத் தொகையில் 25 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரையில் வழங்கப்படும். தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி, சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். மற்ற திட்டங்களில் ஒரு பகுதியில் தொழில் துவங்கிட அப்பகுதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கும். ஆனால் இத்திட்டத்தில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தொழிற் துவங்கலாம். தொழில் துவங்குகின்ற மாவட்டத்தில் கடனுதவி வழங்கப்படும். இது இதர திட்டங்களில்லாத ஒரு சிறப்பம்சமாகும். இத்திட்டத்தில் கல்வித் தகுதி ஏதுமில்லை. விருப்பமும் ஆர்வமும் போதுமானது. வயது வரம்பு 18 முதல் 55 வரை.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் பல்வேறு சுய தொழில்களை செய்து பொருளாதார முன்னேற்றப் பாதையில் முன்னேறி வருகின்றார்கள். அதனை அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டு செல்ல இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான ஆலோசனைகள், உதவிகள் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக வழங்கப்படும். ஆகவே இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிரும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும்.
நேரடி வேளாண்மை தவிர்த்து அனைத்து வகை உற்பத்தி வாணிகம் மற்றும் சேவை தொழில்கள் தொடங்கலாம். சுற்றுச்சூழலுக்கு இலகுவான மக்கும் தன்மையுள்ள நாப்கின்கள் மற்றும் பைகள் தயாரித்தல், திடக்கழிவுகளிலிருந்து பயன்மிகு பொருட்கள் தயாரித்தல், பானை வனைதல், சிற்பம் வடித்தல் போன்ற கைவினைத் தொழில்கள், இன்டீரியர் டிசைனிங், பேஷன் டிசைன் ஸ்டுடியோ, ஃபிட்னஸ் சென்டர் உள்ளிட்ட புத்தினத் தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
கடந்த 01.12.2025 முதல் 15.12.2025 வரையில் KKT திட்டத்தில் 16 விண்ணப்பங்களுக்கு ரூ.16.50 இலட்சம் திட்ட மதிப்பீட்டிறிக்கு ரூ.4.125 இலட்சம் மான்யத்துடன் கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 12 விண்ணப்பங்களுக்கு ரூ.14.50 இலட்சம் திட்ட மதிப்பீட்டிற்க்கு ரூ.3.625 இலட்சம் மான்யத்துடன் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
UYEGP திட்டத்தில் 7 விண்ணப்பங்களுக்கு ரூ.72.75 இலட்சம் திட்ட மதிப்பீட்டிற்க்கு ரூ.18.18 இலட்சம் மான்யத்துடன் கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
AABCS திட்டத்தில் 7 விண்ணப்பங்களுக்கு ரூ.122.75 இலட்சம் திட்ட மதிப்பீட்டிற்க்கு ரூ.42.86 இலட்சம் மான்யத்துடன் கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
NEEDS திட்டத்தில் 1 விண்ணப்பத்திற்கு ரூ.321.15 இலட்சம் திட்ட மதிப்பீட்டிற்க்கு ரூ.75 இலட்சம் மான்யத்துடன் கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
TWEES திட்டத்தில் 16 விண்ணப்பங்களுக்கு ரூ.26.33 இலட்சம் திட்ட மதிப்பீட்டிற்க்கு ரூ.6.88 இலட்சம் மான்யத்துடன் கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் டிசம்பர் 2025 இறுதிக்குள் கடனுதவி திட்டத்தின் இலக்கினை எய்து மாவட்டத்தின் தொழில் வளத்தை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பேசினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு.ஆனந்தன், தாட்கோ பொது மேலாளர் திருமதி.அமுதாராஜ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் திரு.வெங்கடேசன், திறன் மேம்பாட்டு உதவி இயக்குனர் திரு. பாபு, உதவி இயக்குனர்கள் மாவட்ட தொழில் மையம் திருமதி. கோமதி, திரு. வசந்த் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்.

