வெற்றி பெற்ற 30 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு
![]()
ஈரோடு மாவட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் (15.12.2025) அன்றுமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், விலையில்லா தையல் இயந்திரம், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 258 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இன்றைய தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட களிமண் பொம்மைகள் செய்தல், மாறுவேடப் போட்டி, மணல் சிற்பம், தனி நபர் நடிப்பு, பொம்மலாட்டம், கேலி சித்திரம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பானை ஓவியம், நாட்டுப்புறப்பாடல், கிட்டார், டிரம்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.மான்விழி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.செல்வராஜ், உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

