வேளாண் இடு பொருள் விநியோகம் குறித்து பயிற்சி

Loading

சேலம்
சேலம் மாவட்டம் தலைவாசலில் வேளாண் இடுபொருள் விநியோகம் குறித்து சங்க செயலாளர்களுக்கு பயிற்சிகள் 
தமிழக அரசின் புதிய உத்தரவின்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து, தலைவாசல் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வேளாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்றது.
தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் போன்ற வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு எவ்வாறு சரியான முறையில் விநியோகிக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாகவும், நேரடி வகுப்புகளாகவும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சான்று பெற்ற விதைகளின் அவசியம் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள் குறித்து துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் விளக்கமளித்தார்.
அதேபோல், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், நுண்ணூட்ட உரங்கள் பயன்படுத்தும் முறைகள் மற்றும் இடுபொருள் விநியோக பதிவேடுகளை சரியாக பராமரிக்கும் விதங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் ஜானகி பயிற்சி அளித்தார்.
திட்டத்தின் செயலாக்கம் தொடர்பான முக்கிய அறிவுரைகளை கூட்டுறவு சார்பதிவாளர் வில்லவன் வழங்கினார். கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து செயல் விளக்கமும் அளித்தனர்.
உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரகாஷ், ரவிக்குமார், கார்த்திக், ஆத்மா திட்ட அலுவலர்கள் சக்தி, ரமேஷ் உள்ளிட்ட பலரும் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.
0Shares