முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மு. பிரதாப் வாழ்த்து
![]()
தேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் காண்பித்து வாழ்த்து பெற்றார் :
திருவள்ளூர் டிச 10 : மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை மறுசீரமைப்பு பணிகள் மூலம் நிலத்தடி நீரை அதிகரித்தல் , புதிய நடைமுறைகளைப் பின்பற்றுதல் , நீர் பயன்பாட்டு செயல்திறனை ஊக்குவித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் தண்ணீரை மீண்டும் பயன்படுத்துதல் , இலக்கு பகுதிகளில் உள்ள மக்களின் பங்கேற்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒன்றிய நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை புத்தாக்க துறையின் கீழ் தேசிய நீர் விருதுகள், மாநில விருதுகள், மாவட்ட அளவிலான விருதுகள், கிராம ஊராட்சிகள் , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பொது சங்கங்கள், நீர் பயனர் சங்கங்கள், பெருநிறுவனங்கள் , தனிநபர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,ஜல் ஜீவன் திட்டம்,15 வது ஒன்றிய நிதிக்குழு மானியம்,6வது மாநில நிதிக்குழு மானியம்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்,நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், ஆறுகளின் கிளைகள் புத்தாக்கம், மழைநீர் சேகரிப்புகள் அமைத்தல், நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் பாதுகாப்பு மற்றும் நீர் வள மேம்பாட்டு பணிகளை பாராட்டி 4 மாவட்ட அளவிலான விருதுகள் மற்றும் 1 கிராம ஊராட்சி அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு 6 வது தேசிய நீர் விருதுகள் பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சிக்காக 3 வது இடத்திற்கான விருதை பெற்றுள்ளது.புது டில்லியில் உள்ள விக்யான் பவனில் 18.11.2025 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பங்கேற்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடமிருந்து கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றார்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை விருதுகள் பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஆணையர்.பா.பொன்னையா,மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனர் எஸ்.எஸ்.குமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

